சென்னையில் ஆண் குழந்தை கடத்தல்

சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-11-14 12:28 GMT

சென்னை,

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். குழந்தையின் தாய் நிஷாந்தியிடம், தான் ஒரு அரசு ஊழியர் எனக்கூறிய அந்த பெண், ``பிறந்த குழந்தைகளுக்காக அரசு அறிவித்துள்ள திட்டத்தில் உன்னுடைய குழந்தையை சேர்த்தால் உதவி தொகைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதற்காக என்னுடன் தி.நகருக்கு குழந்தையோடு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதை நம்பிய நிஷாந்தியும் தன்னுடைய குழந்தையோடு அந்தப் பெண்ணுடன் தி.நகருக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். அங்கு ஒரு உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்த நேரத்தில் குழந்தையுடன் அந்த பெண் மாயமானார். குழந்தையுடன் பெண் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கதறி அழுதபடி தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையிலும், ஆட்டோ பதிவெண்ணை வைத்தும் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்