சிறந்த கலை ஆசிரியர்கள், நூலாசிரியர்களுக்கான பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலை ஆசிரியர்கள், நூலாசிரியர்களுக்கான பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-11-14 12:51 GMT

சென்னை,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலை ஆசிரியர்கள் மற்றும் ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலைநூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கலை பண்பாட்டுத்துறை நுண்கலைப்பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான மரபுவழி / நவீனபாணி பிரிவில் ஓவிய -சிற்பக் கலைக்காட்சிகளை நடத்தி, சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கியும், தனிநபர் கண்காட்சி / கூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவியும், மாநில அளவில் கலைச்செம்மல் விருதும் வழங்கி கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது.

2024-2025 ஆம் நிதியாண்டில், ஓவிய, சிற்பக் கலைத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த கலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை ஆசிரியர்களுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஓவியம், சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- வீதமும் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் கலை பண்பாட்டுத்துறையால் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓவியக்கலை மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களிடமிருந்தும், ஓவிய, சிற்பக் கலைப்பிரிவில் நூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பின்வரும் விதிமுறைகளின்படி வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், செய்தி நறுக்குகள், தங்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், இதுகாறும் பெற்ற சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய Profile) விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

* ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் கலை நூல்கள் பதிப்பித்துள்ள நூலாசிரியர்கள் தங்களின் புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் பெயர், பிறந்த தேதி, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்களுடன் கூடிய Profile, பதிப்பித்த நூல் (2 பிரதிகள்) ஆகியவற்றினை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

* கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் மூலம் சிறந்த கலை ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய தன் விவரக்குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு 6.12.2024-க்குள் அனுப்பி வைத்திட ஓவிய, சிற்பக் கலையாசிரியர்கள் / கலை நூல் பதிப்பித்த நூலாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008. தொலைபேசி எண்.28193195, 28192152"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்