2026 தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க. அமைக்கும் மெகா கூட்டணியில் பாஜக இருக்காது. பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். அதை தவிர்த்து தான் பேசிக்கொண்டிருக்கிறோம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வியை எழுப்ப வேண்டாம்.
தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும். நான் வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்கு தான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி தான். இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க அதிமுக அரசுதான் காரணம்." இவ்வாறு அவர் கூறினார்.