பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
நகை மதிப்பீட்டாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. வங்கிகளில் நூறு விழுக்காடு அளவிற்கு நகைக்கடன்கள் லாபத்தை தருவதுடன், முழுமையாகத் திரும்பப் பெறப்படும் கடன்களாகவும் உள்ளன. அந்த அளவிற்கு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் வங்கிகளின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஆனால், நகை மதிப்பீட்டாளர்கள் பணியானது இதுவரை வரையறுக்கப்பட்ட பணியாக இல்லை என்பது பெருங்கொடுமையாகும். அது மட்டுமின்றி, வங்கிகளில் நகைக்கடன் பெறும் பொதுமக்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தரகு தொகை மட்டுமே நகை மதிப்பீட்டாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறதே தவிர அவர்களுக்கென்று தனியாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக வங்கியில் நகைகள் அடமானம் வைக்கப்படாத நாட்களில் அவர்களுக்கு எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை.
நிரந்தர பணியாக இல்லாத காரணத்தினால் வங்கி மேலாளர்களின் விருப்பப்படி செயல்பட கட்டாயப்படுத்தப்படுவதோடு, அப்படி செயல்படாத நிலையில் அவர்களின் கோபத்திற்கும், அதன் காரணமாகப் பணி இழக்கும் சூழலுக்கும் தள்ளப்படுகிதின்றனர். தற்காலிக பணியாளர் என்பதால் சுதந்திரமாகப் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற முடிவதில்லை என்பதால், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று நகை மதிப்பீட்டாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். மேலும், நகை மதிப்பீட்டாளர்களை தகுதித்தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், தொழிலாளர் வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகமிக நியாயமானதே.
வங்கிகளின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நெருக்கடிகால பொருளாதாரத் தேவைக்கும் பேருதவி புரியும் நகை மதிப்பீட்டாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் முழுமுதற் கடமையாகும். நகை மதிப்பீட்டாளர்களுக்கு நிரந்த பணி வழங்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டும் தமது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசு கூட்டணி பலத்தோடு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள 40 உறுப்பினர்கள் பலத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நகை மதிப்பீட்டாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்திட வேண்டுமெனவும் இவ்வறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.