வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் தங்கம் சிக்கியது உதவி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.68 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-21 21:45 GMT
ஆலந்தூர், 

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.68 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு உதவி செய்த தனியார் நிறுவன ஊழியரை கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமான நடைமேடை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் விமான நிலையத்தில் பணியாற்றும் தனியார் விமான நிறுவன ஊழியர் முகமது அசம் (வயது 27) என்பவர் அந்த விமானத்துக்குள் சென்றுவிட்டு இறங்கி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர்.

உடனே முகமது அசமை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை சோதனை செய்தபோது, செல்போன்களுக்கு பயன்படுத்தக்கூடிய 3 கவர்கள் அவரிடம் இருந்தன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அவை அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர்.

அதில் அவற்றின் உள்ளே தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் எடைகொண்ட தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அந்த விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர், அதை விமானத்தில் மறைத்து வைத்துவிட்டு, வெளியே எடுத்து வந்து கொடுக்கும்படி தனியார் நிறுவன ஊழியர் முகமது அசமிடம் கூறினார்.

அதன்படி முகமது அசமும் அந்த தங்க கட்டிகளை விமானத்தில் இருந்து வெளியே எடுத்து வந்தபோது அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரிந்தது. விமான நிலையத்தின் வெளியே கடத்தல் ஆசாமியை தேடியபோது அவர், தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

இதையடுத்து தங்க கடத்தல் ஆசாமிக்கு உதவியதாக தனியார் நிறுவன ஊழியர் முகமது அசமை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்து இருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவரிடம் பயன்படுத்தப்பட்ட 9 மடிக்கணினிகள் மற்றும் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளும் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 175 கிராம் தங்க கட்டிகளையும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அந்த வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்