பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு : வாகன ஓட்டிகள் அவதி

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-29 01:05 GMT
சென்னை,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை  உயர்வு விலைவாசி உயர்விலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. டீசல் விலை உயர்வை தொடர்ந்து லாரிகளின் வாடகையை 25 சதவீதம் உயர்த்தப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லாரி வாடகை உயர்வால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 19 காசுகள் அதிகரித்து ரூ.86.70 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.78.91 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்