தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-22 22:30 GMT
சென்னை,

தென்மேற்கு பருவமழை காலம் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே கரையை கடந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வட ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு புயல் கரையை கடந்தது. அந்த சமயத்தில் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மழை இருக்கும்.

வருகிற 24-ந் தேதி(நாளை) தமிழகத்தில் அனேக இடங்களிலும், அதன் தொடர்ச்சியாக 25 மற்றும் 26-ந் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில்(இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகுவதற்கான சூழலும் ஏற்பட்டு வருகிறது. அது ஏற்பட்டால் தமிழகத்துக்கு மேலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், போச்சம்பள்ளியில் 2 செ.மீ., தாமரைப்பாக்கம், திருத்தணியில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்