பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது நடிகர் கமல்ஹாசன் பேட்டி

கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-05-21 22:30 GMT
ஆலந்தூர், 

கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது என்று கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உலக நாடுகளை காரணம் சொல்வார்கள். ஆனால் இதற்கு வெளிநாடுகள் மட்டும் காரணம் அல்ல. இவர்கள் நினைத்தால் விலையை குறைக்க முடியும் என்பது அறிஞர்களின் கூற்றாகும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டிக் கொண்டு இருக்கிறோம். எங்களை சமாதானம் செய்ய அவர்கள் சொல்லும் காரணங்களை ஏற்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு சரிவர உதவிகள் செய்யப்படவில்லை. அவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடல் நடத்த வேண்டும். அவர்களுடைய தேவையை நிறைவேற்றிவிட்டு, நாட்டுக்கு எது நல்லதோ அதை செய்ததால் ஆர்வத்துடன் ஒத்துழைப்பார்கள்.

புதுப்புது திட்டங்கள் என்று சொல்லாமல் பழைய திட்டங்களை நிறைவேற்றி விட்டு புது திட்டங்களை கொண்டு வந்தால் ஆதரவு தருவார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தக் கோரி போராட்டம் நடத்துவதை விட கிராம சபை கூட்டங்களை சரியாக நடத்தினால் போதும். இது கிராமங்களுக்கு மட்டுமின்றி மற்ற இடங்களுக்கும் பரவும். ஆகஸ்டு 15-ந்தேதி கிராமங்களுக்கு சென்று செய்ய வேண்டியதை செய்தால் நன்றாக இருக்கும்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கோவை மாநாட்டுக்காக அழைக்கச் சென்றேன். தேதியை அவர்தான் சொல்ல வேண்டும். கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சியினரின் நட்பு அரசியல் சூழல் நன்றாக இருக்கிறது. இங்கு எல்லாம் மாறும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்