கால்நடை மருத்துவப் படிப்பு: ‘ஆன்–லைன்’ விண்ணப்பம் தொடங்கியது ஜூலை 3–வது வாரம் கலந்தாய்வு நடத்த முடிவு

கால்நடை மருத்துவ படிப்புக்கு ‘ஆன்–லைன்’ விண்ணப்பம் நேற்று தொடங்கியது. ஜூலை 3–வது வாரம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-05-21 21:30 GMT
சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

2018–19–ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (360 இடங்கள்) பி.டெக். உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் (100 இடங்கள்) ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு ‘ஆன்–லைன்’ மூலம் 21–ந் தேதி(அதாவது, நேற்று) காலை 10 மணி முதல் ஜூன் 6–ந் தேதி மாலை 6 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு, அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ் நகல்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (மாதவரம் பால்பண்ணை) இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கை குழு தலைவர் என்ற முகவரிக்கு ஜூன் 11–ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்த ஆண்டு பி.டெக். 3 படிப்புகளையும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கும் முறையும், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாட்டினரும் ‘ஆன்–லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் ஜூலை முதல் வாரம் வெளியிடவும், 3–வது வாரம் கலந்தாய்வு நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பதிவாளர் டாக்டர் திருநாவுக்கரசர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்