கூட்டுறவு சங்க தேர்தலை ஆட்சி பலத்தை வைத்து தமிழக அரசு முறைகேடாக நடத்தப் பார்க்கிறது டி.டி.வி. தினகரன்

ஆட்சி பலத்தை வைத்து கூட்டுறவு சங்க தேர்தலை தமிழக அரசு முறைகேடாக நடத்தப்பார்க்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2018-03-29 21:06 GMT
சென்னை, 

ஆட்சி பலத்தை வைத்து கூட்டுறவு சங்க தேர்தலை தமிழக அரசு முறைகேடாக நடத்தப்பார்க்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாக்குதல்

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை ஆட்சி பலத்தை வைத்து தமிழக அரசு முறைகேடாக நடத்தப்பார்க்கிறது. கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்க கூடிய வகையில் இந்த தேர்தல்களை நடத்துவதற்கு, இந்த அரசு பல திட்டங்களை தீட்டி, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு மிரட்டல் உத்தரவுகளை பிறப்பித்து பொறுப்பாளர்களாக அமைச்சர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் எவ்வளவு சதி திட்டத்தோடு இந்த தேர்தல்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கூட்டுறவு சங்கங்களுக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தடுக்கும் வகையில் இந்த அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பல மாவட்டங்களில் வேட்புமனுத்தாக்கலுக்கு சென்ற தொண்டர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியும், கைது செய்தும் சிறையில் அடைத்துள்ளனர்.

ஜனநாயக முறைப்படி...

கூட்டுறவு சங்கங்களில் பெரும் முறைகேடு செய்வதற்காக, கேள்வி கேட்க யாரும் இருக்க கூடாது என்ற நோக்கத்துடன் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் நடந்து கொள்ளும் இந்த ஆட்சியாளர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் இதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கூட்டுறவு தேர்தல் அக்கிரமத்துக்கு துணை போகும் கூட்டுறவு சங்க அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. கூட்டுறவு தேர்தல்களை இந்த அரசு ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்