சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக்கூடாது மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன், அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல்

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-03-26 21:30 GMT
சென்னை, 

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1-ந் தேதி முதல் சுங்ககட்டணத்தை குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.20 வரை உயர்த்தி வசூல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் சுங்ககட்டணத்தை சுமார் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தி வருவதால் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கலாம். ஆனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அரசுக்கு வருவாய் கிடைக்கவும், தனியாருக்கு லாபம் ஈட்டித்தருவதையும் முக்கியம் என கருதி பொதுமக்கள் மீது சுமையை, பாதிப்பை ஏற்றும் மத்திய அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசு வருகின்ற ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் சுங்ககட்டணத்தை உயர்த்தக்கூடாது. அது மட்டுமல்ல வருகின்ற செப்டம்பர் மாதமும் இதேபோல தமிழகத்தில் உள்ள பிற சுங்கச்சாவடிகளில் சுங்ககட்டணம் உயர்த்தப்படும் என்ற முடிவையும் மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் மீது பல வழிகளில் மறைமுகமாக சுமையை ஏற்றும் சுங்கக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

தனியார் சாலைகளில் சுங்ககட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்கான முதலீடு எடுக்கப்பட்டுவிட்டால், அதன்பின் பராமரிப்புக்காக 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் முதலீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

சுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மக்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்காக முதல் கட்டமாக சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்