ஐகோர்ட்டில் போலீஸ் தடியடி: 9-வது ஆண்டாக இன்று கருப்பு தினம் அனுசரிப்பு கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து, 9-வது ஆண்டாக கருப்பு தினத்தை வக்கீல்கள் இன்று அனுசரிக்கிறார்கள்.

Update: 2018-02-18 22:07 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்து, 9-வது ஆண்டாக கருப்பு தினத்தை வக்கீல்கள் இன்று அனுசரிக்கிறார்கள். கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

போலீஸ் தடியடி

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி ஐகோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் சிலரை 2 நாட்களுக்கு பின்னர் அதாவது பிப்ரவரி 19-ந் தேதி கைது செய்ய முற்பட்டனர்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார் மீது வக்கீல்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு தொடங்கிய இந்த கலவரம், மாலை 6.30 மணி வரை நடந்தது. இதில் வக்கீல்கள், பொதுமக்கள் மட்டுமல்ல, நீதிபதிகளும் சிக்கி படுகாயம் அடைந்தனர். சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தடியடி சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கருப்பு தினம்

இந்த கலவரம், தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இன்றோடு 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

அதேநேரம் இந்த கலவரத்தால் நீதித்துறையின் கம்பீரத்துக்கு சிறிது குந்தகம் ஏற்பட்டாலும், அதனால் ஏற்பட்ட படுகாயத்துடன் தன்னுடைய நீதிபரிபாலன பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அதேநேரம், ஐகோர்ட்டு வக்கீல்கள் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 19-ந் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். 9-வது ஆண்டு கருப்பு தினத்தை இன்று (திங்கட்கிழமை) அனுசரிக்கிறார்கள். இதனையடுத்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகின்றனர்.

மேலும் செய்திகள்