கர்நாடகாவில் ‘மெர்சல்’ படத்தை நிறுத்த முயன்றது இனவெறியின் உச்சம் சீமான் கண்டனம்

கர்நாடகாவில் ‘மெர்சல்’ படத்தை நிறுத்த முற்பட்டு இருப்பது இனவெறியின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2017-10-20 22:45 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கிற மெர்சல் திரைப்படத்தைக் கர்நாடகாவைச் சேர்ந்த இனவெறி கன்னட அமைப்பினரும், அப்படத்தில் வரும் வசனத்திற்காகப் பா.ஜ.க. மற்றும் சில மதவாத அமைப்புகளும் எதிர்ப்புணர்வோடு அணுகுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக மாநிலத்தில் இத்திரைப்படம் வெளியான திரையரங்குகளில் நடைபெற்ற கலவரங்களை காணும்போது தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறி பொழுதுபோக்கு திரைப்படம் வரை பாய்ந்திருப்பதை உணர முடிகிறது.

ஏற்கனவே, காவிரி நதிநீர் சிக்கல் உச்சத்தில் இருக்கும் காலத்திலெல்லாம் தமிழ்த்திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகள் கர்நாடகாவில் சேதப்படுத்தப்படுவதும், திரைப்படம் காண வருகிற தமிழர்கள் தாக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறிவரும் வன்முறை வெறியாட்டங்கள்தான் என்றாலும், சத்யராஜ் நடித்ததற்காக பாகுபலியை நிறுத்த முற்பட்டதும், காரணமின்றி இப்பொழுது மெர்சல் படத்தை நிறுத்த முற்பட்டிருப்பதும் இனவெறியின் உச்சம்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை குறித்து அப்படத்தில் வரும் வசனங்களை நீக்க வேண்டுமெனத் தமிழகப் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிற கருத்துகள் நகைப்புக்குரியதாகவும், அறிவுக்கு ஒவ்வாத வகையிலும் இருக்கிறது.

நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை அனைவருக்கும் சரியான, சமமான, இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் அளிக்கப்பட வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். அரசுப் பள்ளிக்கூடங்களிலேயே தங்களது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் எனவும் பல்வேறு மேடைகளிலும் நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

டெங்குவால் மரணங்கள் நிகழும் இந்நேரத்தில் தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி வந்திருக்கிற மெர்சல் திரைப்படம் உலகம் முழுக்கத் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மட்டும் அத்திரைப்படத்திற்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்திருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கர்நாடக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்