தர்மபுரி அருகே 3 வயது குழந்தையை சாக்குப்பையில் கட்டி கடத்த முயற்சி

தர்மபுரி அருகே 3 வயது பெண் குழந்தையை சாக்குப்பையில் கட்டி கடத்த முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-02-28 23:33 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சிவராமன். சோப்பு, சீப்பு கண்ணாடி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி வள்ளி. இவர்களுக்கு உமாதேவி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் வள்ளி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். குழந்தை உமாதேவி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வீட்டு முன்பு இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி சாக்குப்பையுடன் சென்றார்.

சாக்குப்பைக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை நிறுத்தி மூட்டையை சோதனை செய்தனர்.

அதில் பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்களுக்குள் குழந்தை உமாதேவி அழுது கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொழிலாளி கைது

பின்னர் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு குழந்தையை கடத்த முயன்ற அந்த ஆசாமியை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை காரிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் காரிமங்கலம் அருகே உள்ள நரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பன் (50) எனவும், பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலாளி எனவும், குழந்தையை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

ராஜப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்