நகை, பணம் திருடிய 2 தொழிலாளிகள் கைது

பெயிண்டிங் வேலைக்கு சென்ற வீட்டில் நகை, பணம் திருடிய 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-14 18:45 GMT

குனியமுத்தூர்

பெயிண்டிங் வேலைக்கு சென்ற வீட்டில் நகை, பணம் திருடிய 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெயிண்டிங் வேலை

கோவை குனியமுத்தூர் அருகே சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் பணிக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த பெயிண்டர்கள் சஞ்சீவ்குமார் என்ற சஞ்சய் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர்.

அவர்கள் கடந்த 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அங்குள்ள பீரோ மற்றும் அறையில் இருந்த 2 கிராம் தங்கக்கம்மல், ஒரு கிராம் மூக்குத்தி, ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, பித்தளை குடம் இருப்பதை பார்த்தனர்.

நகை, பணம் திருட்டு

இதையடுத்து சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் 2 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளிக்கொலுசு, பித்தளை குடம் மற்றும் ரூ.6,500 ரொக்க பணம் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை திருடி வெளியே ஒரு இடத்தில் மறைத்து வைத்தனர்.

பின்னர் வழக்கம் போல் பணியை செய்தனர். மாலையில் வேலை முடிந்ததும் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் நாகராஜன் தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த நகை, பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிா்ச்சியடைந்த அவர், குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

2 தொழிலாளிகள் கைது

அதன் பேரில் போலீசார் சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்ற வீட்டில் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்த திருடப்பட்ட நகை மற்றும் பித்தளை குடம், டைல்ஸ் வெட்டும் எந்திரம் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்