விழுப்புரம்: பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி
விழுப்புரம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள டி.கொசப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரவி (வயது 49), ராஜவேல் (36). இவர்களில் ரவி லாரி டிரைவராக இருந்தார். ராஜவேல் கட்டிட வேலை செய்து வந்தார். இருவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று இரவு தங்கள் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு ஒரு பைக்கில் வீடு திரும்பினர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யங்கோவில்பட்டு பஸ் நிறுத்தம் அருகே இரவு 10.30 மணியளவில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார், அவர்களது பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் ரவி, ராஜவேல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழயாக சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் கார் டிரைவரான தட்டாஞ்சாவடியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.