சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம் மாவட்டத்தில் 1,895 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.;
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் பகுதியில் ஏராளமான இடங்களில் போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து அந்தந்த பகுதி பொதுமக்கள் வழிபட்டனர். அதே போன்று இந்து முன்னணி சார்பில் எல்லை பிடாரி அம்மன் கோவில் மற்றும் பல்வேறு இடங்களில் மொத்தம் 75 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து 3 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு நேற்று விநாயகர் சிலைகள் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முன்னணி கோட்ட தலைவர் சந்தோஷ்குமார், மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இதில் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, சுற்று சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிலைகள் கரைக்கப்பட்டன
தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா, கன்னங்குறிச்சி வழியாக முக்கனேரியை அடைந்தது. பின்னர் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அசம்பாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் மூக்கனேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஊர்வலம் செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன.
அதே போன்று மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மூக்கனேரி ஏரியில் கரைக்கப்பட்டன. அதே போன்று மாநகரில் மற்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்து விநாயகர் சிலைகள் அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் கரைக்கப்பட்டன. அதன்படி மாநகரில் நேற்று 850 சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
கன்னங்குறிச்சி
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் புளு பாய்ஸ் கன்னங்குறிச்சி இளைஞர்கள் சார்பில் 12 அடி உயர பாம்பே மாடல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி வந்தனர்.
அந்த சிலையை நேற்று ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் கிரேன் உதவியுடன் மூக்கனேரி ஆற்றில் இறக்கி 12 அடி உயர விநாயகர் சிலையை இளைஞர்கள் கரைத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதே போல் புறநகரில் ஆயிரத்து 45 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இவர்கள் கல்வடங்கம், பில்லுக்குறிச்சி, கோம்பைகாடு. மேட்டூர், கொளத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாவட்டத்தில் நேற்று 1,895 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு சிலர் பரிசல்களில் விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்று கரைத்தனர்.