1,800 பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு

கோவையில் 8 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 1,800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-10-11 19:15 GMT

கோவை

கோவையில் 8 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 1,800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்து உள்ளார்.

திடீர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் திடீர் ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம், ராம்நகர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கலெக்டர் கிராந்தி குமார், அங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.இது குறித்து கலெக்டர் கூறுகையில்,சுகாதார துறை சார்பில் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

1,800 சுகாதார பணியாளர்கள்

இதன் ஒரு பகுதியாக சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து தொட்டிகள் திறந்த நிலையில் உள்ளதா?, டயர், சிரட்டை உள்ளிட்ட தேவையற்றபொருட்கள் திறந்த வெளியில் போட்டு வைக்கப்பட்டு உள்ளதா?, கொசுக்கள் உற்பத்தியாக வசதியாக மழைநீர் தேங்கும் இடங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

மேலும் தண்ணீர் தேங்கிய நிலையில் இருந்தால் அபேட் எனும் மருந்தை ஊற்றி வருகின்றனர். இந்த பணியில் மாநகராட்சி பகுதியில் ஆயிரம் பேரும், ஊரக பகுதியில் 800 பேரும் என மாவட்டம் முழுவதும் 1,800 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்