சரக்கு வேன் கவிழ்ந்ததில் 16 பெண்கள் காயம்

சரக்கு வேன் கவிழ்ந்ததில் 16 பெண்கள் காயமடைந்தனர்.

Update: 2023-09-09 19:04 GMT

செந்துறை:

கூலி வேலைக்காக...

அரியலூர் மாவட்டம், குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்களை விவசாய கூலி வேலைக்காக, குழுமூர் கிராமத்தை சேர்ந்த ராஜாவின் மகன் சக்திவேல் ஒரு சரக்கு வேனில் அழைத்து வந்தார்.

சித்துடையார் கிராமம், வீரனார் கோவில் அருகே வந்தபோது, சரக்கு வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில கவிழ்ந்தது. இதில் அந்த சரக்கு வேனில் பயணித்த பெண்கள் அலறியபடி கருவேல முட்கள் மீதும், பள்ளத்திலும் விழுந்தனர்.

16 பேர் காயம்

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 16 பெண்கள், செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்