காலணியில் மறைத்து ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தல்

காலணியில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.12½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-10 20:59 GMT

செம்பட்டு:

தொடரும் தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்கள் பல்வேறு வடிவங்களில் தங்கத்தை உடலில் மறைத்து எடுத்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தற்போது தங்கத்தை நூதன முறையில் பொருட்களில் மறைத்து கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

திருச்சி பயணி

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.

அப்போது, திருச்சியை சேர்ந்த ஒரு பயணி சந்தேகப்படும் வகையில் விமானத்தில் இருந்து வந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் அணிந்திருந்த காலணியில் தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.12½ லட்சம் தங்கம் பறிமுதல்

அந்த காலணியில் 24 காரட் தரமுள்ள 209 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்