ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1092 பேர் பிடிபட்டனர்

சேலம் கோட்டத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1,092 பேர் பிடிபட்டனர். இவர்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-07-20 18:40 GMT

சூரமங்கலம்:-

சேலம் கோட்டத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1,092 பேர் பிடிபட்டனர். இவர்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிரடி சோதனை

சேலம் ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனைக்குழுவினர், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் சேர்ந்து கடந்த 15-ந் தேதி 6 ரெயில்களில் அதிரடி டிக்கெட் சோதனையை நடத்தினர். சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை-சேலம், சேலம்-ஈரோடு மற்றும் சேலம்-விருத்தாசலம் பிரிவுகளில் செல்லும் ரெயில்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி விருத்தாசலம்-சேலம், சில்சார்-கோவை, கன்னியாகுமரி-திப்ரூகர், புதுடெல்லி -திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரெயில்களில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.

சேலம், ஈரோடு, கோவை, கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து 29 பேர் டிக்கெட் பரிசோதகர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது ரெயில் பயணிகளை முழுமையாக சோதனை செய்த குழு, டிக்கெட் இல்லாத பயணிகளை கண்டறிந்தனர். மேலும் டிக்கெட் இல்லாத பயணிகளை தவிர, உயர் வகுப்பில் பயணம் செய்தவர்கள், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள் போன்ற குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.5½ லட்சம் அபராதம்

டிக்கெட் இல்லாத பயணிகள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன்படி டிக்கெட் எடுக்காமல் சென்ற பயணிகள் 1,092 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 120 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது போன்ற அதிரடி சோதனைகள் மற்றும் வழக்கமான டிக்கெட் சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்