கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், பேராயர்கள் மனு கொடுத்தனர்.
குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் திருச்சபையின் சேலம் மாவட்ட பேராயர் ஹெரால்டு டேவிட், துணை பேராயர் தேவஞானம் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் கார்மேகத்திடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், குளோபல் கிறிஸ்டியன் சர்ச் ஆப் இந்தியா சினாட் திருச்சபையை அங்கீகரிக்கப்பட்ட திருச்சபை பட்டியலில் தமிழக அரசு சேர்க்க வேண்டும். இந்த திருச்சபையில் உள்ள பேராயர்கள், போதகர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். சிறுபான்மையினர் துறையில் பேராயர்களுக்கு மாவட்ட அளவில் பொறுப்புகள் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.அரசால் இலவச தையல் பயிற்சி வழங்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு தையல் எந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.
அப்போது அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சேலம் மாவட்ட பொருளாளர் அட்கின்ஸ் பீட்டர், செயலாளர் ராஜரத்தினம், பொருளாளர் ஜான்பீட்டர், நிர்வாகிகள் எசேக்கியேல், வெஸ்டன், செல்வகுமார் மற்றும் மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், ஈரோடு மாவட்ட பேராயர் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.