கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை: யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஜாமீன் அளிக்க முடியாது
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற 10 பேருக்கும் ஜாமீன் அளிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
மதுரை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற 10 பேருக்கும் ஜாமீன் அளிக்க மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூரை சோ்ந்த என்ஜினீயர், கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா். போலீஸ் விசாரணையில், அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இங்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது.
சாகும் வரை சிறை
இந்த தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அருண், சிவகுமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (29), ரஞ்சித் (29), செல்வராஜ் (39) ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த ஜோதிமணி என்ற பெண் ஏற்கனவே கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் மீதான வழக்கு மட்டும் நாமக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தண்டனை பெற்ற 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேல்முறையீடு
இந்தநிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களில், கோகுல்ராஜ் இறப்பு வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களும்தான். இவர்கள் அனுமானத்தின் அடிப்படையில் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
நாங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களுக்கு கீழ்கோர்ட்டு அளித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, எங்களுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
ஜாமீன் அளிக்க மறுப்பு
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா, நீதிபதிகள் முன்பு ஆஜராகி, மனுதாரர்கள் தரப்பினரால் எங்கள் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு விதித்த தண்டனையை நிறுத்திவைத்து, ஜாமீன் அளிக்கக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பாக தங்கள் தரப்பில் வாதாடுவதற்கு வக்கீல் நியமிக்க வேண்டுமா? என கேட்டனர். அதற்கு அவர், ஏற்கனவே எங்கள் தரப்பில் வக்கீல்கள் உள்ளனர் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற மனுவை மனுதாரர்கள் வாபஸ் பெற வேண்டும். தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான மனு மீது மட்டும் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.