விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால் 10 பேர் பலி7 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 1 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த 6 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர் கண்காணிப்பில் சேர்க்கப்பட்டனர். இதில் உயர் சிகிச்சையில் இருந்த சங்கர் (வயது 52), தரணிவேல் (50), சுரேஷ் (46), ராஜமூர்த்தி (60), மலர்விழி (60) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் ஒருவர் உயர் சிகிச்சையில் இருந்து வருகிறார். 33 பேர் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பில் நலமாக இருக்கிறார்கள்.
மெத்தனால் கலந்த விஷ சாராயம்
புதுச்சேரியில் சாராயம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு வந்து விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஷ சாராயத்தால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முக்கிய குற்றவாளியான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் (27) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த சாராய பாக்கெட்டுகளை ஆய்விற்கு அனுப்பி சோதனை செய்ததில், அதில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டில் 4 பேர் சாவு
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (34), அவரது மனைவி அஞ்சலை (22), அஞ்சலையின் தாய் வசந்தா (40), பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் விஷ சாராயத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகியோர் தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளனர். அஞ்சலை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் விஷ சாராயம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷ சாராயத்தை விற்ற கரியன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அம்மாவாசை (40) என்பவரும் அதே மதுபானத்தை அருந்தி உடல்நலம் சீராக காணப்பட்டபோதிலும் மருத்துவ சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு சம்பவத்துக்கும் தொடர்பு?
முதல்கட்ட விசாரணையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி இருக்கலாம். விஷ சாராயம் என்பது எத்தனால் மற்றும் மெத்தனால் கலக்கப்பட்டது. இதை குடித்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படும். இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மரக்காணம் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேர் மற்றும் சித்தாமூர் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்.
டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவை உட்கொண்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற வதந்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது விஷ சாராயத்தால் ஏற்பட்ட இறப்பு. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
தற்காலிக பணி நீக்கம்
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நடவடிக்கை எடுக்காத மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியசோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சாராய வேட்டை
மதுவிலக்கு தொடர்பாக போலீசார் முடுக்கிவிடப்பட்டு சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மண்டலத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு போலீசாருடன், மதுவிலக்கு போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாவு 10 ஆனது
இதற்கிடையே மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்த சித்திரை மகன் மண்ணாங்கட்டி (46) என்பவர் நேற்று இரவு இறந்தார்.
இதனால் விஷ சாராயத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
கிராம மக்கள் சாலை மறியல்
இதற்கிடையே சாராயம் குடித்து 6 பேர் பலியானது, எக்கியார்குப்பம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு வந்து, கள்ளச்சாராயம் விற்போரை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்ய முயற்சித்தும் வெற்றி பெறவில்லை. அவர்கள் கள்ளச்சாராயம் விற்போருக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை முழங்கினர்.
இதனால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதித்தது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கலெக்டர் பேச்சுவார்த்தை
இதற்கிடையே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்படும், விற்பனை செய்வோர் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். அதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.