ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

தமிழக-கர்நாடக எல்லையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-24 20:30 GMT

கூடலூர்

தமிழக-கர்நாடக எல்லையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

தமிழக-கர்நாடக எல்லையான நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கக்கநல்லாவில் நேற்று போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் 8 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

இதையடுத்து உடனடியாக போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரையும், அவர்கள் வந்த காரையும் மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் ஆகியோர், அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

ரூ.10 லட்சம் மதிப்பு

அதில் அவர்கள், கூடலூர் செம்பாலாவை சேர்ந்த ஷானவாஸ்(வயது 28), கூடலூர் ஓ.வி.எச். சாலையை சேர்ந்த சையது இப்ராஹிம்(31) என்பதும், கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு போதைப்பொருளை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 லட்சம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்