கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
கீழக்கரை அருகே கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே விடுதியில் தங்கி இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஆசிக், நெல்லையை சேர்ந்த தினேஷ்குமார், புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த சிவபாலன், புதுச்சேரியை சேர்ந்த ராஜ்குமார் ஷாகு, கன்னியாகுமரியை சேர்ந்த முகம்மது ஹாசிப், மதுரையைச் சேர்ந்த தர்னீஷ், விக்ரம், சேலத்தைச் சேர்ந்த கிஷோர் ஆகிய 8 மாணவர்கள் கல்லூரி விடுதியில் இரவு உணவாக புரோட்டா, கோழிக்கறி, தயிர் சாதம் சாப்பிட்டு உள்ளனர்.
சற்று நேரத்தில் 8 மாணவர்களும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். உடனே சிகிச்சைக்காக கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன் உள்ளிட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி மாணவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார் மற்றும் காசிவிசுவநாததுரை, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் நியமன அலுவலர் டாக்டர் விஜயக்குமார், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று வாந்தி எடுத்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ஏர்வாடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.