தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியர்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், பொருளாளர் சுமதி மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.