உலகின் மிக ஆழமான வெரிவ்கினா குகை
ஜார்ஜியா நாட்டில் இருந்து பிரிந்த அப்காசியாவின் காக்ரா மாவட்டத்தில்,காக்ரா மலைத் தொடரில் அமைந்திருக்கிறது வெரிவ்கினா குகை. இதுதான் இந்த பூமியில் அறியப்பட்ட மிகவும் ஆழமான குகை ஆகும்.
இதன் ஆழம் 2,212 மீட்டர் ஆகும். அதாவது 7 ஆயிரத்து 257 அடி. இதன் நுழைவு வாசல் கடல் மட்டத்தில் இருந்து 2,285 மீட்டர், அதாவது 7 ஆயிரத்து 497 அடி உயரத்தில் இருக்கிறது. அந்த நுழைவு வாசலானது சுமார் 10 அடி மற்றும் 13அடி என்ற அளவில் குறுக்கு வெட்டாக அமைந்துள்ளது. 1968-ம் ஆண்டு இந்த குகை 'S-115' என்று அறியப்பட்டது. அதற்கு காரணம் கிராஸ்நோயார்ஸ்கில் இருந்து வந்தவர்களால் இந்த குகை கண்டறியப்பட்டு, அவர்கள் இதன் உள்ளே சென்றனர். அவர்களால் 115 மீட்டர் (377 அடி) வரை மட்டுமே செல்ல முடிந்தது. அதனால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் 1982-ல் மாஸ்கோவில் இருந்து வந்த ஒரு குழு, இந்தக் குகையை இரண்டாவது முறையாக கண்டறிந்து, அதன் உள்ளே சென்றது.
அவர்களால் இந்தக் குகைக்கு 'P1-7' என்று பெயரிடப்பட்டது. அந்தக் குழுவினர் 1986-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, 440 மீட்டர் வரையான ஆழத்தை அடைந்தனர். இது 1,440 அடி ஆகும். 1983-ம் ஆண்டு குகை ஆய்வாளரில் ஒருவரான அலெக்சாண்டர் வெரவ்கின் என்பவர், ஒரு ஆய்வில் இறந்த காரணத்தால், அவருடைய பெயரில் இந்த குகையும் 'வெரிவ்கினா குகை' என்று பெயர் பெற்றது. 1986-ம் ஆண்டிற்குப் பிறகு, 2000-ம் ஆண்டு வரை இந்தக்குகையில் மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப் படவில்லை. அதன்பிறகு 2000-ம் ஆண்டு ஒரு புதிய குழு இந்த குகை பகுதிக்கு வந்து ஆய்வு செய்தது. 2015-ம் ஆண்டு வரை அவர்கள் குகையின் அடிப்பகுதியை ஆய்வு செய்தபோதிலும், அதன் ஆழம் 440 மீட்டராகவே இருந்தது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தக் குழு, இந்த குகைக்கு மற்றொரு நுழைவுப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்தது. அதன் வழியாக ஆய்வு செய்தனர். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்த குகையின் இறுதி ஆழம் 2,212 மீட்டர் (7,257 அடி) என்று உறுதி செய்யப்பட்டது.