வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்வு!

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நடப்பாண்டில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள பணம் பத்தாயிரம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது .

Update: 2022-12-05 03:03 GMT

நியூயார்க்,

சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சொந்தங்களுக்கு பணம் அனுப்புவது வழக்கம்.இந்நிலையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நடப்பாண்டில் (2022இல்) மட்டும் இந்தியாவிற்கு அனுப்பியுள்ள பணம் பத்தாயிரம் கோடி(100 பில்லியன்) அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது .

உலக வங்கி அறிக்கையின்படி, ஒரு நாடு வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் நாட்டு மக்களிடமிருந்து ஓராண்டில் மட்டும் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பணப்பரிவர்த்தனையை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.2021ஆம் ஆண்டில் இந்தியா 89.4 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் 3% பங்கு இந்த வருவாய் மூலம் உள்ளது.

வெளிநாடுகளில் அதிகரித்துள்ள ஊதிய உயர்வு மற்றும் அமெரிக்கா போன்ற பிற வளர்ந்த நாடுகளில் நிலவும் வலுவான தொழிலாளர் சந்தைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில், பல இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகளுக்கு மாறியுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு நடப்பாண்டில் 5% அதிகரித்துள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், குடும்ப வருமானத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்தியாவை தொடர்ந்து மெக்ஸிகோ, சீனா, எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் நாட்டு மக்களிடமிருந்து அதிகளவு பணத்தை பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்