கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல காரணம் என்ன?

கடல், சமவெளி, பள்ளத்தாக்கு, ஏரி, குளம், நீர்வீழ்ச்சி, சதுப்பு நிலம் என இயற்கையின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுலா பிரதேசமாக கேரள மாநிலம் அமைந்திருக்கிறது. ‘கடவுளின் தேசம்’ என அழைக்கப்படும்.

Update: 2022-06-03 16:26 GMT

கேரளா, இயற்கை அன்னை கொடுத்த அழகிய சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்கும் வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அங்கு நிலவும் சீதோஷண சூழலும், இயற்கை அழகும் இந்தியாவின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களையும் சுற்றுலா பயணிகளாக ஈர்க்க வைத்து அதன் அழகை ரசிக்க வைக்கிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தியாவில் விரும்பி சுற்றிப்பார்க்கும் இடமாகவும் கேரளா விளங்குகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கும் மாநிலமாக கேரளா அமைந்திருக்கிறது என்பதை பல்வேறு கணக்கெடுப்புகளும் உறுதிபடுத்தியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக சுற்றுலாவே முடங்கி போயிருக்கும் நிலையில் கேரளாவின் சுற்றுலா துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதை சமீபத்திய கள ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2021-ம் ஆண்டின் முதல் காலாண்டு (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) முடிவில் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு வருகை புரிந்திருந் தனர். ஆனால் 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத் தில் 38 லட்சம் பேர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 72.48 சதவீத வளர்ச்சியாகும்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதற்கு ஏற்ப சுற்றுலா மையங்களை பராமரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும், சுற்றுலா கிளப் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா மையங்களின் பராமரிப்பு மாணவர்களின் மூலம் மேற்பார்வையிடப்படும்.

சுற்றுலா மையங்களின் பராமரிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்கு காரணமாகவும் அமைந்திருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரை, 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 14,489 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 43,547 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அமைந்துள்ள சுற்றுலா மையங்களை அதிகம் பார்வையிடுகிறார்கள்.

கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கேரள அரசு சார்பில் '360 டிகிரி மார்க்கெட்டிங்' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த பிரச்சாரம் அமைந்திருந்தது.

கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் கூறுகையில், ''இந்த பிரச்சாரம், சுற்றுலா பயணிகள் மத்தியில் கேரள மாநிலத்தை பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணி களின் வருகையை அதிகப்படுத்தியது. அகமதாபாத்தில் நடந்த சுற்றுலா கண்காட்சியிலும் கேரளா தனி முத்திரை பதித்தது. மாயா என்ற பெயரில் சுற்றுலா வழிகாட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்