பலவிதமான ஸ்கேன் பரிசோதனைகள்

‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை என்பது உடலுக்குள் அசையாமல் இருக்கிற உறுப்புகளின் தன்மையை படம் பிடித்து காண்பிக்கிறது.

Update: 2022-08-19 15:35 GMT

'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களை படம்பிடித்து காண்பிக்கிறது. குறிப்பாக, ரத்தக் குழாய்களில் நகர்கின்ற ரத்த செல்களை படம்பிடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அறிய செய்கிறது.

அசையா உறுப்புகளில் இருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறுவதில்லை. ஆனால் அசையும் உறுப்புகளில் இருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறும்.

இந்த மாற்றத்தை வைத்து ரத்த ஓட்டத்தின் தன்மையை கணிக்க முடியும். இந்த அடிப்படையில்தான் 'டாப்ளர் ஸ்கேன்' பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரத்த குழாய்க்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ரத்த செல்களின்மீது இந்த ஒலி அலைகள் பட்டு எதிரொலித்து திரும்புகின்றன. அவ்வாறு திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி, வேகம், அடர்த்தி, திசை போன்ற பல விவரங்களை அலசி ஆராய்ந்து, ரத்த ஓட்டத்தை கணித்து, அதை உருவப்படமாகவும் வரைபடமாகவும் தயாரித்து கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கிறது. இந்த படங்களை பிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும் முடியும்.

டியூப்ளக்ஸ் டாப்ளர் ஸ்கேன் என்பதும் மேலே கூறப்பட்ட வகையை சேர்ந்ததுதான். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையை காண்பிக்கிறது. அலை டாப்ளர் ஸ்கேன் என்பது, இந்த ஸ்கேன் கருவியை நோயாளியின் படுக்கைக்கே கொண்டுவந்து பரிசோதிக்க உதவுகிறது. ரத்த ஓட்ட பாதிப்பை மிக வேகமாக கணிக்க இது உதவுகிறது.

கலர் டாப்ளர் ஸ்கேன் என்பது, ஒலி அலைகளை வண்ண படங்களாக மாற்றி காண்பிக்கிறது. இதன் பலனால் தமனி, சிரை என்று ரத்தக்குழாய்களை பிரித்துக்காண இயலும். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையையும் காண முடியும்.

கை, கால், கழுத்து, மூளைக்கு செல்லும் தமனி மற்றும் சிரைக்கான ரத்த குழாய்களின் நிலைமைகளை அறிய இதுபோன்ற ஸ்கேன் பரிசோதனைகள் உதவுகின்றன. ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா, சுருங்கி உள்ளனவா என்பதை அறியலாம். ரத்தக் குழாய்க்குள் ரத்தம் உறைந்துள்ளதா? ரத்த ஓட்ட தடை ஏற்பட்டுள்ளதா? எனவும் அறியலாம்.

முக்கியமாக, 'ஆழ்சிரை ரத்த உறைவு நோய்' மற்றும் நுரையீரல் 'ரத்த உறைவுக் கட்டி' நோயை அறிய இந்த பரிசோதனை பெரிதும் உதவுகிறது. ரத்தக்குழாய் வீக்கம் மற்றும் அழற்சியை கணிக்கவும் இது பயன்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்