தென்கொரியாவில் நடப்பது என்ன? பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் கைது - முழு விவரம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
சியோல்,
தென்கொரிய அதிபராக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் மீது ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கியோ ஹி. அதிபரின் மனைவி கிம் கியோ ஹி-க்கு தனிப்பட்ட முறையில் மதபோதகரான சொய் ஜொ யங் விலை உயர்ந்த கைப்பையை (Hand Bag) பரிசாக அளித்தார்.
இதன் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 1.65 லட்சம் ஆகும். அதேவேளை, அதிபர், அதிபரின் மனைவி மற்றும் அரசு பதவிகளில் உள்ளவர்கள் ரூ. 64 ஆயிரம் வரையிலான மதிப்பு கொண்ட பரிசுகளை பெற அந்நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதற்கு மேல் மதிப்பு கொண்ட பரிசு பொருட்கள் பெறுவது குற்றமாகும்.
இதனால், அரசின் கொள்கை விவகாரத்தில் தலையிட அதிபரின் மனைவி கிம் கியோ ஹிக்கு லஞ்சமாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிபர் யூன் சுக் இயோலின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. இதனால், அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
ஊழல் வழக்கில் விசாரணை உள்பட அரசியல் சூழ்நிலை தனக்கு எதிராக மாறுவதை உணர்ந்த அதிபர் யூன் சுக் இயோல் கடந்த மாதம் 3ம் தேதி தென்கொரியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினர். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில் அந்த அறிவிப்பை அதிபர் வாபஸ் பெற்றார்.
இதனை தொடர்ந்து அதிபர் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார்.
அதேவேளை, அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக யூன் சுக் இயோலுக்கு எதிராக அந்நாட்டு மத்திய ஊழல் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய தலைநகர் சிலோலில் உள்ள கோர்ட்டு கடந்த மாதம் 31ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 3ம் தேதி யூன் சுக் இயோலை கைது செய்ய ஊழல் தடுப்பு அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அதிபர் மாளிகை பாதுகாப்புப்படையினரால் அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், யூன் சுக் இயோலை கைது செய்யாமல் அதிகாரிகள் திரும்பினர்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலை மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அதிபர் மாளிகையில் தங்கி இருந்த யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர்.
யூன் சுக் இயோலை கைது செய்ய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், போலீசார் இன்று அதிகாலை அதிபர் மாளிகை சென்றனர். அப்போது அவர்களை அதிபரின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், அதிபரின் ஆதரவாளர்களும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதை தடுத்தனர்.
இதனால், அதிபர் மாளிகையின் பின்புறம் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து ஏணி மூலம் அதிபர் மாளிகைக்குள் குதித்தனர். பின்னர், அங்கிருந்த யூன் சுக் இயோலை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை 5 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட யூன் சுக் இயோலை ஊழல் தடுப்பு பிரிவின் தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர் அளிக்காமல் மவுனமாக உள்ளார்.
யூன் சுக் இயோலை 48 மணிநேரம் கைது செய்து ஊழல் தடுப்பு பிரிவு கட்டுப்பாட்டில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 48 மணிநேரத்திற்கு பின்னர் புதிதாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும். புதிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் யூன் சுக் இயோலின் கைது நீட்டிக்கப்பட்டு மேலும் 20 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.