அன்றும், இன்றும்- பாரம்பரிய நகைகள்

பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமே அந்தந்த வீட்டிற்குரிய பாரம்பரிய நகைகளானது பல தலைமுறைகளைத் தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களிடம் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியும்.

Update: 2022-08-05 15:37 GMT

இந்த பாரம்பரிய நகைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் நம்முடைய மூதாதையர்களை நினைவுபடுத்து பவையாகவும் இருக்கும்.இதுபோன்ற பழங்கால பாரம்பரிய நகைகள் வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிகரற்றவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

தங்க சோக்கர் நெக்லஸ்

சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும். இது கழுத்தை இறுக்கிப் பிடித்து மார்பிற்கு மேல் இருப்பதுபோல் வடிவமைக்கப்படும் நகையாகும்.இந்தப் பாரம்பரிய நகை யானது இன்றளவும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அணிந்து கொள்ளக்கூடிய நகையாக வலம் வருகின்றது.சோக்கர் நெக்லஸ் விலையுயர்ந்த கற்கள், முத்துகள் மற்றும் போல்கியால் அலங்கரிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடியும்.

ராயல் தங்க மோதிரம்

பழங்கால ராயல் தங்க மோதிரம் என்பது இந்திய தொன்மையை பறைசாற்றும் அழகான மற்றும் நேர்த்தியான மோதிரம் ஆகும். பழங்காலத்தில் பயன்படுத்திய அதேபோன்ற டிசைன் மற்றும் வடிவங்களில் இப்பொழுதும் தங்க மோதிரங்களை வடிவமைத்து விற்பனை செய்கிறார்கள்.பெரும்பாலும் இதுபோன்ற மோதிரங்களில் விலையுயர்ந்த பெரிய ஒற்றை கற்களைப் பதித்து மோதிரங்களை வடிவமைக்கிறார்கள். பெரிய ஒற்றை கல் மோதிரம் அதை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றது.

ரூபி நெக்லஸ்

பழங்கால நகைகளில் ரூபி கற்களினால் செய்யப்பட்ட அட்டிகைகள் மற்றும் நெக்லஸ்கள் முக்கிய இடத்தை வகிப்பவையாக இருந்திருக்கின்றன.இன்றைய காலகட்டத்திலும் மணமகளுக்கு அணிவிக்கப்படும் உயர்ந்த தங்க நகைகளின் வரிசையில் இதுபோன்ற ரூபி நெக்லஸ்களும் இடம்பெறுவதைப் பார்க்க முடியும்.மாங்காய், அன்னப்பறவை, மயில் போன்ற டிசைன்களில் ரூபி கற்களைப் பதித்து செய்யப்பட்டு வந்த நெக்லஸ்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் புதுமையான டிசைன்களுடன் செய்யப்படுகின்றன.

நாகர் பதக்கம்

இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்புகளில் மிகவும் பிரபலமானது என்று இந்த நாகர் பதக்கங்களை சொல்லலாம். இதில் ஐந்து தலை நாக வடிவானது சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றது.இந்தப் பழங்கால பதக்கமானது இன்றளவும் சில வீடுகளில் தலைமுறைகளைத் தாண்டி அணியப் படுவதைப் பார்க்க முடியும்.இந்து புராணங்களின்படி, ஐந்து தலை பாம்பு சத்தியத்தின் பாதுகாவலர் என்பதாலேயே நகை வடிவில் அணியப்பட்டு வந்திருக்கின்றது.இன்றும் இதுபோன்ற பதக்கங்கள் பெரும்பாலான நகைக் கடைகளில் பழமையான நகை பிரிவுகளில் விற்கப்படுகின்றன.

ஜிமிக்கிகள்

பழங்கால பெண்கள் அனைவராலும் அணியப்பட்ட நகை என்ற பெருமை இந்த ஜிமிக்கிகளுக்கு உண்டு..அதிலும் கற்கள் பதித்த ஜிமிக்கிகளையே பெண்கள் பெரிதும் விரும்பி அணிந்திருக்கிறார்கள். நாகரீக மாற்றத்தினால் தங்கத்தினால் மட்டுமே செய்யப்பட்ட ஜிமிக்கிகள் வந்துவிட்டன. ரூபி, எமரால்டு, முத்து மற்றும் வெள்ளை கற்கள் பதித்த ஜிமிக்கிகளைஇக்காலப் பெண்கள் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.

டெம்பிள் நெக்லஸ்

மாங்காய், அன்னப்பறவை, மயில், நாகம், பூ வேலைப்பாடு இப்படி ஏதாவது ஒரு டிசைனில் நெக்லஸ் அமைந்திருக்க நெக்லஸின் மையத்தில் இருக்கும் பதக்கமானது இந்திய கோவில் சிற்பங்களை தத்ரூபமாக இருப்பதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வடிவமைப்புகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டிருப்பதை அதன் வேலைப்பாட்டில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்வகை டெம்பிள் நெக்லஸ்கள் பெரும்பாலும் சிவப்புக்கல்,மரகதம், வெள்ளை கற்கள், போல்கி,முத்துக்கள், பல வண்ண கற்கள் பதிக்கப்பட்டு மயில், மலர் மற்றும் அம்மன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்தப் பழங்கால பாணியுடன் வரும் நகைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்களுடன் சம காலத்திற்கு ஏற்றார் போல டெம்பிள் நகைகளை உருவாக்குகிறார்கள்.இதுபோன்ற நகைகளை விரும்பி வாங்குவதற்கு என்றே ஒரு சாரார் இருக்கின்றனர்..

மாங்காய் மாலை, காசு மாலை

ஆரம்ப காலகட்டங்களில் கற்கள் மட்டுமே பதித்து செய்யப்பட்ட இந்த மாலைகள் இப்பொழுது கற்கள் பதிக்காமல் தங்கத்தினால் மட்டுமே செய்தும் கிடைக்கின்றன.பழங்காலத்தில் மாங்காய் மாலை என்றாலே அது சிவப்பு கற்கள் பதித்து செய்யப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.. பிறகு காலம் செல்லச் செல்ல இந்த மாங்காய் மாலையில் பல வண்ண கற்கள் பதித்தும்,கற்களே பதிக்காமலும் வரத் துவங்கிவிட்டன. அதேபோல் சிறிய மாங்காய் முதல் பெரிய மாங்காய் வரை பல்வேறு அளவுகளில் மாங்காய் மாலைகள் வரத் துவங்கிவிட்டன.பழங்காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர் வீடுகளில் கட்டாயம் ஒரு காசுமாலை இருந்திருக்கின்றது.அந்தக் காலத்து காசு மாலைகளில் ஒவ்வொரு காசும் அதிக தங்கத்தில் அழுத்தம் திருத்தமாக செய்யப்பட்டு இருந்திருக்கின்றன..இப்பொழுது வரும் காசு மாலைகள் குறைந்த தங்கத்திலும் பல்வேறு அளவுகளிலும் கிடைக்கின்றன.. காசு மலைகளில் கற்கள் பதித்து வருபவை கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

முகப்பு

ஒரு காலகட்டம் வரை முகப்பு வைத்து மட்டுமே செயின்கள் இருந்திருக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.. அதிலும் இரட்டை வடம், மூன்று வடம் என தங்கச் சரங்கள் அதிகமான செயின்களில் கற்கள் பதித்து செய்யப்பட்ட முகப்புகள் கட்டாயம் இருந்திருக்கின்றன. பிறகு ஒரு காலகட்டத்தில் முகப்புகள் இல்லாமல் செயின்கள் வரத் துவங்கின.அதன் பின்னர் மறுபடியும் பல்வேறு அளவுகளில்,கற்கள் பதித்தும் கற்கள் பதிக்காமலும் பல்வேறு டிசைன்களில் முகப்புகள் வரத் துவங்கிவிட்டன.ஒற்றை சரம் கொண்ட செயின்களுக்குக் கூட முகப்புகள் வைத்து அணிவது இப்பொழுது பிரபலமாகிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்