இன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட தினம்

Update: 2022-10-12 03:48 GMT

சென்னை:

ஆக்கப்பூர்வமான திறமைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த மனிதன் சமூகத்தில் உள்ள ஒரு பகுதி மக்களிடையே வெளிப்படுத்தும் பாரபட்சமான பாகுபாடுகளை தகர்த்தெறிய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையம்.

 

1948-ம் ஆண்டு மனித உரிமை பிரகடனத்தை வெளியிட்ட எலினோர் ரூஸ்வெல்ட்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி இருந்த சாதி, மத, இன, மொழி, நிற பாகுபாட்டின் காரணமாக ஒவ்வொரு மக்களுடைய அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இதனை சரிசெய்யும் பொருட்டு 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி 30 அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய மனித உரிமை பாதுகாப்பு ஆவணத்தை ஐ.நா. சபை வெளியிட்டது.

இதையடுத்து, இந்தியாவில் 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அதே ஆண்டு (1993-ம் ஆண்டு) அக்டோபர் மாதம் 12-ந் தேதி தேசிய‌ மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியை தலைவராக கொண்ட இவ்வாணையத்தில் மொத்தம் 5 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இந்த ஆணையத்தின் பணியானது இந்திய மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அவற்றை உறுதி செய்வதும் ஆகும்.

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டு மக்களுக்கான சமத்துவம், சுதந்திரம், சமய சார்பு, கல்வி கலாசாரம், சுரண்டெலுக்கெதிரான உரிமை மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணுதல் என்ற 6 அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு உறுதி செய்வதும், அவற்றுக்கு எதிரான செயல்முறைகளை கட்டுப்படுத்துவதும் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் கடமையாகும்.

மனித உரிமை மீறல்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் நிலையம், நீதிமன்றம், இவற்றிற்கு முதன்மையாக மனித உரிமைகள் ஆணையம் திகழ்கிறது. அரசியல் மற்றும் தனி மனிதரின் ஈடுபாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் இவ்வாணையமானது அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்கள் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்றுள்ளது.

2021-2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 170 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை கல்வி முறை பெருகினாலும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஓங்கினாலும் நம்மிடையே இன்றளவும் பரவியுள்ள கொடிய நோயான சாதி,மத, இன, மொழி பாகுபாடு ஓயவில்லை. நாட்டின் அடிப்படையான கிராமங்கள் தொட்டு நகரங்கள் வரை உள்ள ஒவ்வொரு இடங்களிலும் எண்ணற்ற பிரிவினைகளும், புறக்கணிப்புகளும் நடந்த வண்ணமே உள்ளது.

பாதுகாப்பு தர வேண்டிய போலீசாரின் மூலமும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. பிரிவினைகளை தடுக்க வேண்டிய அரசும் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி வருகிறது. இதை எல்லாம் யாரிடம் முறையிட, யார் இதற்கு தீர்வு காண்பார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மனித உரிமைகள் ஆணையம் என்கின்ற ஒப்பற்ற நீதிக்கூடம் இருப்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.‌

 

அடித்தட்டு மக்களின் உரிமை மீறல் சம்பந்தமான ஆட்சேபனை யாவையும் அகற்றிடும் அறக்கூடமாக திகழும் மனித உரிமைகள் ஆணையம் தமிழகத்தில் 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி நிறுவப்பட்டது. அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் அறங்காவலனாக விளங்கும் மனித உரிமைகள் ஆணையத்தை அனைவரும் பயன்படுத்த இந்நாளில் நாம் நினைவு கூர்வோம். மனித உரிமைகள் குறித்தான புகார்களுக்கு hrcnet.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்