இன்று தேசிய விவசாயிகள் தினம்... 'விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்'

பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து இந்நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Update: 2023-12-23 09:41 GMT

கோப்புப்படம் 

விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவரான சவுத்ரி சரண் சிங், 1979ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். குறுகிய பதவிக்காலத்திலேயே, விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பல நலத்திட்டங்களை உருவாக்கினார்.

சவுத்ரி சரண் சிங்கின் பங்களிப்புக்காகவும், ஒரு விவசாயி நாட்டின் பிரதமராக மாறியதை கவுரவிக்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 23ஆம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுவதாக இந்திய அரசு கடந்த 2001ஆம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

நமது நாடு விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ளது. அவர்கள் மற்றவர்களைபோல் குறிப்பிட்ட நேரம் மட்டும் வேலை செய்யாமல் 24 மணி நேரமும் நிலத்தில் வியர்வை சிந்த உழைத்து, நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தானியங்களை, காய்கறிகளை, பழங்களை அறுவடை செய்து கொடுக்கின்றனர். ஆனால், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.

உரிய விலை கிடைக்காத பட்சத்திலும் கடனை வாங்கியாவது பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைச் செய்கின்றனர். ஆனால், அப்படி விவசாயம் செய்யும் காலத்தில் பருவமழை மாறி பெய்துவிடுவதால் நீரின்றி பயிர்கள் கருகுகின்றன அல்லது பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் நீரில் மூழ்குகின்றன. விளைவு, விவசாயிகள் கடனாளி ஆகிவிடுகின்றனர். அரசும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகையைத் தருவதில்லை. இதுசில நாட்கள் அப்படியே தொடரும் பட்சத்தில் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடுகின்றன.

பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் இயக்கங்களை ஏற்பாடு செய்து, இந்த நாள் கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு இன்றைய நவீனமான விவசாய அறிவை வழங்குவதற்காகவும் அவர்களின் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான முறைகளையும் கொண்டுவருவதாக இந்நாள் உள்ளது.

நாமும் விவசாயிகள் தினத்தின்போது, விவசாயிகள் படும் கஷ்டத்தை அறிந்து, உழவர் சந்தைகளில் பேரம் பேசாமல் உணவுப்பொருட்களை வாங்குவோம். ஒருபோதும் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருப்போம். விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்.

 

Tags:    

மேலும் செய்திகள்