பண்டிகைகளின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாட வேண்டும் - பங்காரு அடிகளார்
பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கொண்டாட வேண்டும் என்று பங்காரு அடிகளார் கூறினார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அனைவருக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க ஆசியும் அருளும் உண்டு. பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மட்டுமல்ல, உழவர்கள், உழைப்பவர்கள் அனைவருக்குமானது. பண்டிகை என்பது தேவையான ஒன்று. பண்டிகையின் போது நண்பர்களும், உறவினர்களும் ஒன்று கூடுவர். ஆனால் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கொண்டாட வேண்டும்.
பண்டிகைகள் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தர்மம் முக்கியம். அதர்மத்தை அடக்குவது தர்மம் மட்டும்தான். உழைப்பவனுக்கு தான் வாழ்வில் அமைதி கிடைக்கும். எனவே மனிதர்கள் உழைத்து வாழ வேண்டும். அப்போதுதான் நோய்களை எதிர்கொள்ளும் சக்தி, நம் உடலுக்குக் கிடைக்கும்.
ஆசைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆசை என்பது கடல் அலையைப் போல ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும். கரையைத்தாண்டினால் அலையால் ஆபத்து ஏற்படுவதைப் போல, ஆசையும் எல்லை கடந்தால் பிரச்சினைதான்.
இறைவன் இவ்வுலகில் அனைத்தையும் அமைத்துக் கொடுத்திருக்கிறான். அதனால் உலக உயிர்கள் அனைத்திற்கும் தேவையானவை, இயற்கையாகவே கிடைக்கின்றன. அதனை பயன்படுத்தி உழைத்து வாழவேண்டும். இயற்கையை போற்றி வணங்கி பாதுகாக்க வேண்டும். தாய் தந்தையரை போற்ற வேண்டும்.
பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும், வாசகர் களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.