விண்வெளி விந்தைகள்
விண்வெளியில் நட்சத்திரங்கள் பல ஒளிவீசுவதை பார்த்திருப்போம். பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் ஒளி, பூமியை வந்தடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வரை ஆகுமாம்.;
இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டு திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
விண்ணில் இருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசு துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும், ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.
சூரியக்குடும்பத்தில் உள்ள 2-வது மிகப்பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக்கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமி பந்துகளை உள்ளே வைக்க முடியும்.
விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல. ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957-ல் ரஷியா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.
நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959-ல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷியாவின் லூனா-3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை படம் எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.