ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

Update: 2022-11-26 05:06 GMT

தார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி இனி மின்சாரக் கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.

ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தைக் கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

ஆதார் எண்களை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.

முறைப்படுத்த வேண்டும்

இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

ஓட்டேரியை சேர்ந்த செல்லத்துரை:- மின் இணைப்புகளில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது வரவேற்புக்குரியது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு வாடகைத்தாரர்களின் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது.

ஆதார் எண் இணைப்பை மக்களுக்கு சிரமம் இல்லாமல் எளிமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

புரசைவாக்கத்தை சேர்ந்த ஜெயபால்:- ரூ.2 ஆயிரத்துக்கு மேல் 'ஆன்லைன்' மூலம் மின்சார கட்டணம் செலுத்துவோர்களுக்கு மட்டும் ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று அறிவித்திருக்கலாம். ஆனால் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது ஏழை-எளிய, நடுத்தர மக்களை அலைகழிக்கும் செயல் ஆகும்.

எனவே இந்த உத்தரவை மின்சார வாரியம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு சிரமம் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பெரவள்ளூரை சேர்ந்த விஜயகுமாரி:-எனக்கு 'ஆன்லைன்' பற்றி ஒன்றுமே தெரியாது. என்னால் எப்படி ஆதார் எண்ணை இணைக்க முடியும். மின்சார கட்டணம் செலுத்தும் மின்வாரிய அலுவலகங்களிலும் இந்த வசதி இல்லை. என்னைப் போன்ற மக்களின் சூழ்நிலையை உணர்ந்து வீடுகளுக்கே வந்து ஆதார் எண் இணைப்பு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

மின்சார அளவை கணக்கிட வரும் மின்சார வாரிய பணியாளர்கள் மூலமாகவே இந்தப் பணியையும் மேற்கொள்ள உத்தரவிடலாம்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த செல்வம்:- எனக்கு சொந்தமாக 2 மாடி வீடு இருக்கிறது. 2 வீட்டிலும் எனது பெயரில்தான் மின் இணைப்பு உள்ளது. தற்போது இந்த அறிவிப்பால் 2 வீட்டுக்கும் தனித்தனியாக 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று சொன்னாலும் ஆதார் எண் இணைக்கப்பட்டவுடன் சமையல் கியாஸ் மானியம் பறிபோனது போன்று இலவச மின்சாரமும் பறிபோகும் நிலை இருப்பதாக பலர் பேசி கொள்கிறார்கள்.

எனவே இந்த விவகாரத்தில் மின்சார வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தொழில்நுட்பக் கோளாறு

கொளத்தூரை சேர்ந்த சாந்தம்மாள்:- மின் நுகர்வோர் அட்டை, வீட்டின் உரிமையாளர் பெயரில் இருக்கிறது. அந்த மின் அட்டை மூலம் நாங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துகிறோம். 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் பறிபோய் விடுமோ? என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் வாய்மொழியாக விளக்கம் அளித்திருந்தாலும் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பால் வாடகை வீட்டுத்தாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதை அரசாங்கம் உத்தரவு மூலம் தெளிவுப்படுத்த வேண்டும்.

அண்ணாசாலையை சேர்ந்த சாமிநாதன்:- மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து மின்சார கட்டணம் செலுத்திய நிலை மாறி தற்போது இருந்த இடத்தில் இருந்து 'ஆன்லைன்' மூலம் சட்டென்று மின்சார கட்டணத்தை செலுத்தி வருகிறேன்.

மின்நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று எனது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதனடிப்படையில் இணைக்க முயற்சி செய்தேன். ஆனால் 'சர்வர்' பிரச்சினையால் உடனடியாக பதிவு செய்ய முடியவில்லை.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்லைனில் தொழில்நுட்ப கோளாறுகள் நிகழாதவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரியம் ஆராயுமா?

மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று அறிவிப்பால் மின் நுகர்வோர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபராத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்