உடல் பருமனை தடுக்க எளிய அணுகுமுறைகள்

உணவு சாப்பிடும்போது சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தவிர்த்துவிடுங்கள். செயற்கை பானங்கள் பருகுவதை கூடுமானவரை தவிருங்கள். உணவில் மட்டுமின்றி உடல் இயக்க செயல்பாடுகளில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

Update: 2022-08-11 10:50 GMT

20 முதல் 55 வயதிற்குள், வருடத்திற்கு 0.5 முதல் 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கக் கூடும். இந்த எடை அதிகரிப்பு உணவை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படுவதில்லை. சுமார் 100 முதல் 200 வரை கூடுதல் கலோரிகளை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. உணவில் மட்டுமின்றி உடல் இயக்க செயல்பாடுகளில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

தினமும் 100 முதல் 200 கலோரிகள் குறைவாக சாப்பிடுவது அல்லது கூடுதலாக 100 முதல் 200 கலோரிகளை எரிப்பது, நீண்ட காலத்திற்கு உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க போதுமானதாக இருக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க செய்ய வேண்டிய சில எளிமையான விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

அலுவலகத்திற்கு பேருந்தில் பயணம் செய்பவர்கள் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும்போது ஒரு நிறுத்தத்திற்கு முன்பாகவே இறங்கி நடக்கலாம். அப்படி 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது 60 கலோரிகளை எரிக்க உதவும்.

உணவு சாப்பிடும்போது சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தவிர்த்துவிடுங்கள். அவை நூற்றுக்கணக்கான கலோரிகளை கொண்டிருக்கின்றன. அதற்கு பதிலாக காய்கறி சாலட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் தினசரி சாப்பிடும் உணவில் 200 கலோரிகள் வரை குறையக்கூடும்.

செயற்கை பானங்கள் பருகுவதை கூடுமானவரை தவிருங்கள். அதற்கு பதிலாக ஊட்டச்சத்து கொண்ட உணவு பானத்திற்கு மாறுங்கள். இதன் மூலம் 145 கலோரிகளை குறைக்கலாம். பானங்களுக்கு பதிலாக தண்ணீரை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.

சமைக்கும்போது வழக்கத்தைவிட ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை குறைவாக பயன்படுத்துங்கள். உதாரணமாக ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் கலோரி அளவு 100-க் கும் அதிகமாக உள்ளது. எனவே எண்ணெய்யை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் கலோரிகளை தவிர்க்கலாம்.

இனிப்பு பலகாரங்கள், சாக்லேட் வகைகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சிறிது சாப்பிட்டுவிட்டு மீதியை மறுநாள் சாப்பிட பழக வேண்டும். ஒரு சாக்லேட்டில் பாதியை இன்றும், மீதியை நாளையும் சாப்பிடுவதன் மூலம் 100 கலோரிகளை குறைக்கலாம்.

உருளைக்கிழங்கில் தயாரான உணவுகளை இரவில் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொரித்த உருளைக்கிழங்கில் 200 கலோரிகள் இருக்கக்கூடும். அதனால் சாப்பிடும் தட்டில் எத்தனை உருளைக்கிழங்கு துண்டுகள் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

மனதுக்கு பிடித்தமானவர்களுடனோ, உறவினர்களுடனோ, நண்பர்களுடனோ அதிக நேரம் பேசுவதாக இருந்தால் நடந்தபடியே பேச பழகுங்கள். அப்படி நடந்தபடி 30 நிமிடங்கள் பேசுவதன் மூலம் கூடுதலாக 100 கலோரிகளை எரிக்கலாம்.

நடைப்பயிற்சிக்கு நாயை உடன் அழைத்துச் செல்லுங்கள். அப்படி நாயுடன் தினமும் 30 நிமிடங்கள் நடக்கும்போது 150 கலோரிகளுக்கு மேல் எரிக்கலாம். இத்தகைய எளிமையான அணுகுமுறை உடல் எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக 500 கலோரிகள் சாப்பிட்டு பின்பு கலோரிகளை எரிப்பதற்கு முயற்சிப்பதற்கு பதிலாக கலோரிகள் குறைவான உணவை சாப்பிடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்