மணமான பெண்கள் அணியும் ஷாக்கா போலா வளையல்கள்

வங்காளிகளின் பாரம்பரிய பழக்கமான திருமணத்தின்போது பெண்கள் அணியும் ஷாக்கா போலா வளையல்கள் இன்று மற்ற மாநிலத்து பெண்களிடையே விரும்பி அணியப்படுகிறது. இதற்கு காரணம் அந்த வளையல்கள் பார்க்க கவர்ச்சியாகவும் நேர்த்தியாக தயாரிக்கப் படுவதாலும் அணிவதற்கு அழகாக இருக்கிறது. ஷாக்கா போலா வளையல்கள் இன்று அதன் மேற்புறத்தில் தங்கத்தினால் ஆன தகடுகளும் கம்பிகளும் சேர்க்கப்பட்டு இன்றைய நகை கடைகளில் பிரபலமாக விற்கப்படுகின்றன.

Update: 2022-10-05 08:32 GMT

ஷாக்கா போலா வளையல்கள் பாரம்பரியமாக வங்காளி பெண்கள் திருமணத்தின் போது அதை ஒரு சம்பிரதாயமாக அணிந்து கொள்வர். திருமணம் ஆனா பெண்கள் சிலர் சேர்ந்து குறிப்பீட்ட சடங்குகளுடன் இதை மணமகளுக்கு அணிவிக்கும் சடங்கை மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர். திருமணம் ஆன ஒவ்வொரு வங்காளி பெண்ணும் ஒரு ஜோடி ஷாகா போலா வளையல்களை இரண்டு கைகளிலும் அணிய வேண்டும் என்பது அவர்களின் சம்பிரதாயம். வங்காளி மீனவர்களிடையே இந்த பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. நகைகள் அணியும் வசதி இல்லாத மீனவர்கள் வெள்ளை நிற சங்கை எடுத்து தூள் செய்து அதனுடன் சில வகையான கோந்துகளை சேர்த்து கெட்டிப்படுத்தி அதில் அழகான வடிவங்களை செதுக்கி வளையல்கலாக அணிந்து கொண்டனர். இதுவே ஷாகா வளையல்கள். அதேபோல் வங்காள விரிகுடாவில் அதிக அளவில் கிடைக்கும் பவழத்தை இதே போல் தூள் செய்து அதனுடன் கோந்து கலந்து சிவப்பு நிறத்தில் போலா வளையல்களை தயாரித்து அணிந்து கொண்டனர்.

திருமணம் ஆகும் பொழுது அணிந்து கொள்ளும் இந்த வளையலை மணமகள் முதல் ஓராண்டு வரையில் உடையாமல் பார்த்துக் கொள்வது கணவனின் ஆயுள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற கருத்தும் அவர்களிடையே நிலவி வருகிறது. கண்ணாடி போல் தெரியும் இந்த வளையல் ஒன்றோடு ஒன்று உரசும்போது மிக மெல்லிய அழகான ஒலியை எழுப்பும். இந்த ஷாக்கா போலா வளையல்களில் நாளாவட்டத்தில் அழகான வடிவங்கள் செதுக்கப்படுவதுடன் தங்கம் பித்தளை செப்பு போன்றவற்றால் அழகான வடிவங்களில் செதுக்கப்பட்ட தகடுகளை இந்த வளையல்களின் மேல் பதித்தும், மேற்கூறிய உலோகங்களால் ஆன கம்பிகளை இடையே செருகியும் இந்த வளையலுக்கு கூடுதல் அழகையும் மெருகையும் கொடுக்கத் தொடங்கினர். திருமணமான வங்காளி பெண்கள் அணிந்து கொள்ளும் இந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் இன்று மற்ற மாநிலத்து பெண்களிடையேவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய நகை கடைகளில் இந்த ஷாக்கா போலா வளையல்கள் சங்கு மற்றும் பவளம் மட்டுமின்றி வேறு சில பொருட்களாலும் வடிவமைக்கப்பட்டு அதன் மேல் அழகான 22 கேரட் தங்க தகடுகளில் டிசைன்கள் செய்யப்பட்டு, அத்துடன் தங்க கம்பிகள் இணைக்கப்பட்டு பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் கிடைக்கின்றன. வெண்மையான சங்கு மற்றும் பவளத்தினாலும் இந்த வளையல்கள் செய்யப்பட்டு அவற்றுடன் தங்கம் சேர்க்கப்பட்டு பொலிவாகவும் இந்த வளையல்கள் பெரும்பாலான நகைக்கடைகளில் கிடைக்கின்றன. இதை அணிவது பெண்களுக்கு அழகை கொடுப்பது மட்டுமின்றி பவளம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதும் இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

Tags:    

மேலும் செய்திகள்