பாலைவனத்தை அதிநவீன ஸ்மார்ட் சிட்டி ஆக மாற்றும் சவுதி அரேபியாவின் திட்டம் எத்தனை சதவீதம் முடிந்துள்ளது..? விரிவான பார்வை

பெல்ஜியத்தின் அளவு பரப்பளவு கொண்ட ஒரு பாலைவனத்தை நியோம் எனப்படும் உயர்-தொழில்நுட்ப நகரமாக மாற்றும் திட்டம் ஆகும்.

Update: 2022-07-15 11:17 GMT

ரியாத்,

உலகில் வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில், மலை சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒரு புதிய உலகளாவிய கனவு திட்டத்தை 2017ஆம் ஆண்டில் அறிவித்தார்.

அதன்படி, பரவலாக பாலைவனப் பகுதிகள் அதிகம் காணப்படும் சவுதியில், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றுவதே இத்திட்டமாகும்.

பெல்ஜியத்தின் அளவு பரப்பளவு கொண்ட ஒரு பாலைவனத்தை "என்.இ.ஓ.எம் அல்லது நியோம்" எனப்படும் உயர்-தொழில்நுட்ப நகர-பிராந்தியமாக மாற்றுவது முக்கிய திட்டம் ஆகும்.

சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டாலர். 26,500 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய நியோம் நகரம், குவைத் அல்லது இஸ்ரேல் நாடுகளை விடப் பெரியது. மேலும் இது சவுதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை, 50 ஆயிரம் கோடி டாலர்கள் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

நியோம் திட்டம்:

இந்த பெரிய நகரம் நியூயார்க் நகரத்தை விட 33 மடங்கு பெரியதாக அமையும் என்று கூறப்படுகிறது. இது 26,500 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும். இந்த பெரிய நகரம் அகாபா வளைகுடா மற்றும் சவூதி அரேபியாவின் செங்கடல் கடற்கரை வரை நீண்டிருக்கும்.

இந்த நகரம் செயற்கை நுண்ணறிவு மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி கட்டப்படும், மேலும் 2026க்குள் முடிக்கப்படும்.இந்த திட்டம் எதிர்கால நலனுக்கான ஒரு வரைபடமாகும், இதில் மனிதகுலம் பூமித்தாயின் நலனில் சமரசம் இல்லாமல் முன்னேறுவதை மையமாக கொண்டுள்ளது.

பறக்கும் டிரோன் டாக்சிகள், ஜுராசிக் பார்க் கேளிக்கை பூங்கா மற்றும் ஒரு மாபெரும் செயற்கை நிலவு ஆகியவை நகரத்திற்கு திட்டமிடப்பட்ட விஷயங்கள். இந்த திட்டத்தில் நகர்ப்புற விண்வெளி நிலையம் மற்றும் இரட்டை ஹெலிக்ஸ் வடிவம், ஒரு பருந்தின் நீட்டிய இறக்கைகள் வடிவம் மற்றும் பூக்கும் மலர் போன்ற வடிவிலான கட்டிடங்கள் கட்டப்படும்.


நியோம் திட்டத்தில் தற்போது என்ன முடிந்துள்ளது?

நியோமின் முதல் கட்ட வேலை 2025 க்குள் முடியுமென்று கூறப்படுகிறது.செயற்கைக் கோள் படத்தைப் பார்த்தால் வரிசையாக இருக்கும் வீடுகள், இரண்டு நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. தற்போது நியோம் திட்டத்தில் சவுதி அரச வம்சத்திற்காகன அரண்மனைகள், கோல்ஃப் மைதானங்கள், ஹெலிபேடுகள் போன்றவை மட்டுமே கட்டப்பட்டிருப்பதை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.

செங்கடல் கடற்கரைக்கும், மலைகள் நிறைந்த ஜோர்டானிய எல்லைக்கும் இடையே உள்ள பாழடைந்த நிலப்பரப்புதான் நியோம் நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் பகுதி. ஆனால் அங்கே பழங்குடி மற்றும் நாடோடி மக்களான பெடோயின் ஹவைதாட் மக்கள் வாழ்கின்றனர். நியோம் மெகா சிட்டியை கட்டுவதற்காக இதுவரை இரண்டு சிறு நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 20,000 ஹவைய்தாட் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

நியோமின் விளம்பர வீடியோக்கள் சவுதி அரேபியாவின் கடுமையான சட்டங்கள் இல்லாத தன்னாட்சி பெற்ற ஒரு அழகான, கவர்ச்சியான மாநகரம் தான் நியோம் என்று காட்டுகின்றன. இந்தத் திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒன்று என்கின்றனர்.


தி-லைன் திட்டம்:

இந்த திட்டத்தின் மற்றுமொரு பகுதியானது "தி லைன்" என்று அழைக்கப்படும் மற்றொரு பசுமை ஆற்றல் நிரம்பிய பகுதி ஆகும். இது ஒரே நேர்கோட்டில் பரவியிருக்கும் நகரம் ஆகும்.

இந்த நகரமானது 105 மைல்கள் (170 கிமீ) நீளமுள்ள ஒரே நேர்கோட்டிற்கு மேல் நீட்டிக்கப்படும் பெல்ட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திட்டத்தை உருவாக்க சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் செலவாகும்.

ட்ரோஜனா திட்டம்:

இந்த திட்டத்தில் ட்ரோஜனா என்ற கிராமம் அல்லது வசிப்பிடம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் இரண்டு மைல் நீளத்திற்கு செயற்கையாக உருவக்கப்படும் நன்னீர் ஏரி இருக்கும் என்றும், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் வசதிகள் ஆகியவற்றின் கலவையுடன் இந்த கிராமம் அமையும் என்று சொல்லப்படுகிறது.

"ட்ரோஜனா திட்டம்" 2030க்குள் 7 லட்சம் பார்வையாளர்களையும், அங்கு 7,000 பேர் நிரந்தரமாக வசிக்கும் படி, குடியிருப்பாளர்களையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் "சவுதி ராஜ்ஜியத்தின் தொலைநோக்கு பார்வை - 2030" திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று சவுதி பட்டத்து இளவரசர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்