மகளுக்காக செய்த தியாகமும்.. மன வேதனையும்..!

ஒரு நபர் தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பி, கார்ப்பரேட் துறையில் அதிக சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.

Update: 2022-11-27 13:36 GMT

திருமணமும், குழந்தை பிறப்பும் தாம்பத்திய வாழ்வின் முக்கிய அங்கம். பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்ததும் பிரசவ வலி பறந்து போய்விடும். தங்கள் கவனம் முழுவதும் குழந்தை மீது திரும்பி விடும். வேலைக்கு செல்லும் பெண்கள் மகப்பேறு விடுமுறை எடுத்து பிறந்த குழந்தையை கவனித்துக்கொள்வார்கள். அந்த விஷயத்தில் ஆண்களை பொறுத்தவரை சில நாட்கள் மட்டுமே விடுமுறை எடுக்க முடியும். ஒரு நபர் தனது மகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பி, கார்ப்பரேட் துறையில் அதிக சம்பளம் வாங்கிய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த முடிவு தன் வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை சமூக வலைத்தளத்தில் பகிர, அது பலருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது. பலரும் தங்கள் குழந்தை பிறப்பு நிகழ்வையும், மனைவியின் பிரசவத்தின்போது விடுமுறை எடுக்க முடியாமல் தவித்ததையும் பகிர, அது வைரலாகிவிட்டது.

பிரசவத்தின்போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நபர் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருக்கிறார். அவரது வேலை நீண்ட தூர பயணம் சார்ந்ததாக இருந்திருக்கிறது. பல்வேறு நகரங்களுக்கு சென்று பணி புரிந்துவிட்டு திரும்பும் சூழலை கொண்டிருந்ததால், அந்த வேலையை ரசித்து செய்திருக்கிறார். ஆனால் மகளின் பிறப்பு, அருகாமையை விரும்பி இருக்கிறது. அவருக்கு மகளை பிரிந்து நீண்ட தொலைவு செல்ல மனமில்லை. தனது முழு நேரத்தையும் மகளுடன் செலவிட விரும்பி, வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

"என் மகள் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டேன். இது ஒரு விசித்திரமான முடிவு என்று எனக்கு தெரியும். 'வேலையை விட்டுவிட்டால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கும் தெரியுமா?' என்று நிறைய பேர் அறிவுரை சொன்னார்கள். ஆனால் என் மனைவி அகன்ஷா எனக்கு பக்கபலமாக இருக்கிறார். எனக்கு அது போதும். அகன்ஷாவும் நானும் எங்கள் வருங்கால மகளுக்கு 'ஸ்பிதி' என்று பெயரிட ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். கடந்த மாதம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தபோது எங்கள் கனவு நனவாகியது. எங்கள் இதயங்கள் நிறைந்தன, எங்கள் வாழ்க்கை முழுமையடைந்தது. ஆனால் என் மகள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பே, நான் எடுத்த ஒருவார விடுமுறை போதுமானது அல்ல. என் முழு நேரத்தையும் மகளுடன் செலவிட விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். எனது நிறுவனத்தாலும் எனது விடுமுறையை நீட்டிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அதனால் ராஜினாமா செய்துவிட்டேன். அதனை தந்தையின் பதவி உயர்வு என்றே அழைக்கிறேன். அன்று முதல் என் மகள்தான் என் வாழ்க்கையே. இரவில் அவள் தூங்கும் வரை என் கைகளில் வைத்துக்கொண்டு தாலாட்டு பாடுகிறேன். அந்த தருணங்களை ரசிக்கிறேன். சில சமயங்களில் தாலாட்டுப் பாடலின் நடுவே அவள் என்னை உன்னிப்பாக பார்ப்பதை நான் கவனிக்கிறேன். அது என் இதயத்தை நெகிழவைக்கிறது.

அப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. அது தூக்கமில்லாத, ஆனால் மகிழ்ச்சியான மாதம். இன்னும் சில மாதங்களுக்கு பிறகு வேலைக்கு விண்ணப்பிப்பேன். அதுவரை இந்த நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தப் போகிறேன், என் மகளுக்காக.

என் மனைவியை பொறுத்தவரை 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் இருக்கிறார். பணி, தாய்மை இரண்டிலும் அவள் சிறந்து விளங்குவதைப் பார்க்கும்போது மன நிறைவாக இருக்கிறது.

அதே நேரத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் பெண்கள் மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதுபோல், தந்தையாகும் ஆண்களை விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை என்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தந்தை தன் குழந்தையுடன் எவ்வளவு குறைவான நேரத்தை செலவிடுகிறார் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

நான் எடுத்த முடிவு எளிதானது அல்ல. பல ஆண்களால் அதை எடுக்க முடியாது. ஆனால் வரும் ஆண்டுகளில் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன். ஏனென்றால் கடந்த ஒரு மாதத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை, இதுநாள் வரை கழித்த ஆண்டுகளையும் விட மன நிறைவாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

''நானும் 2 மாதங்களுக்கு முன்பு தந்தையானேன். உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வுடன் அதிக சம்பளம் கிடைத்த வேலையை விட்டு வெளியேறி, என் குழந்தையுடன் எனது முழு நேரத்தையும் செலவழித்தேன். வீட்டிலிருந்து ப்ரீலான்சிங் ஆக பகுதி நேர வேலை செய்தேன். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அதை தொடர்ந்து செய்ய முடியவில்லை. நான் எடுத்தது தவறான முடிவு என்று குடும்பத்தினர் கூறினார்கள். எனது நிறுவனத்தில் 3 நாள் மட்டுமே மகப்பேறு விடுப்பு எடுக்க முடியும். பிரசவத்தின்போது ஒருவர் மருத்துவமனையில் அதிக நாட்கள் செலவிடுகிறார். தாய் தன் வயிற்றில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது. தந்தை தனது இதயத்தின் மூலம் பெற்றெடுக்கிறார்" என்று மற்றொரு நபர் பகிர்ந்து கொண்டார்.

இருப்பினும் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்கு எந்தவொரு தியாகத்தையும் செய்யலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்