ஆயுர்வேதத்தின்படி பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்

அனைத்து உயிரினங்களும் சரிவிகித, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக விளங்கும் ஆயுர்வேதம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் வழிகாட்டக்கூடியது.

Update: 2022-08-14 15:56 GMT

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது. ஆயுர்வேதத்தின்படி பின்பற்ற வேண்டிய உணவு விதிகள் பற்றி பார்ப்போம்.

விதி 1: பசி முற்றிலும் நீங்கும் வரை சாப்பிடாதீர்கள். 70 முதல் 80 சதவீதம் வரை வயிறு நிரம்பும் அளவுக்கு சாப்பிட்டால் போதுமானது. அப்படி சாப்பிடுவதுதான் செரிமானம் தொடர்ந்து சுமுகமாக நடைபெறுவதற்கு வித்திடும். அதாவது உங்கள் வயிற்றில் 70 சதவீதம் நிரம்பியிருக்க வேண்டும், 30 சதவீதம் காலியாக இருக்க வேண்டும். அதற்கேற்ப 70-30 என்ற உணவு விதியை எப்போதும் கடைபிடியுங்கள்.

விதி 2: காலை, இரவு வேளையில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை சாப்பிடுவதுதான் நல்லது. இதில் மதிய உணவுக்கு மட்டும் விதி விலக்கு கொடுக்கலாம். செரிமானம் ஆவதற்கு சற்று கடினமாக இருக்கும் உணவுகளை சாப்பிடலாம். மதிய உணவை விரும்பியபடியும் சாப்பிடலாம்.

விதி 3: இரவு நேரத்தில் உடல் ஓய்வெடுக்க தயாராகும்போது செரிமான செயல்முறை மெதுவாக நடைபெறும். அந்த சமயத்தில் செரிமானமாவதற்கு கடினமாகும் உணவுகளை சாப்பிடும்போது அதில் உள்ள கலோரிகள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு விடும். எனவே தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிடுவதை தவிர்க்கவும். தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடுவது நல்லது.

விதி 4: ஆயுர்வேதத்தின்படி உணவை மீண்டும் சூடுபடுத்துவது நல்லதல்ல. எனவே பழைய உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும். பகலில் தயாரிக்கப்பட்ட உணவை இரவிலும் சாப்பிடலாம். ஆனால் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து பின்னர் சூடு படுத்தி சாப்பிடுவது தவறானது. எப்போதும் புதிதாக சமைத்த உணவை உண்பதற்கு முயற்சியுங்கள்.

விதி 5: உங்களுக்கு அடிக்கடி அஜீரணம் ஏற்பட்டால் உண்ணாவிரதம் இருப்பது நல்லது. அதுபோல் சாப்பிட்ட உணவு முழுவதுமாக ஜீரணமாகவில்லை என்று உணர்ந்தால் உலர்ந்த இஞ்சியை (சுக்கு) பொடி செய்து சுடு நீரில் கலந்து பருகலாம். அஜீரண கோளாறு இருந்தால் அது பூரணமாக குணமாகும் வரை குறைவாக சாப்பிடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்