'ரோலர் ஸ்கேட்டிங்' சாம்பியன்

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த ‘அகில இந்திய நேஷனல் சாம்பியன்ஷிப்’ போட்டிகளில், ‘ரோலர் ஸ்கேட்டிங்’ விளையாட்டின் இரட்டையர் பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார், ஆதித்யா.

Update: 2022-10-16 11:20 GMT

6 வயது முதலே ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல சாதனைகளை செய்திருக்கும் அவரிடம் சிறுநேர்காணல்.

* உங்களுடைய ஆசை என்ன?

சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, அதில் தங்கம் வென்று இந்திய கொடியுடன் கம்பீரமாக போஸ் கொடுப்பதுதான் என்னுடைய ஆசை. லட்சியம். இதற்கான பயிற்சிகளில் மும்முரம் காட்டுகிறேன்.

* தமிழ்நாட்டில், ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான வசதிகள் இருக்கிறதா?

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கொஞ்சம் குறைவுதான். ஆனால் இருக்கிறது.

* உங்களை பற்றி சிறு அறிமுகம் கொடுங்கள்?

திருப்பூர் எங்களது பூர்வீகம். இருப்பினும் எனது பெற்றோருடன், சென்னை கே.கே. நகரில் வசிக்கிறேன். தற்போது எஸ்.எஸ்.என்.கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு அமர்தயா என்ற சகோதரன் இருக்கிறான்.

* ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி?

உறவினர் மூலமாகத்தான் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு என் வாழ்க்கைக்குள் நுழைந்தது. என் தந்தையின் உந்துதலால், 6 வயதிலேயே ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற தொடங்கினேன்.

* ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியில் தீவிரம் காட்டத்தொடங்கியது எப்போது?

ஆரம்பத்தில், பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. இருப்பினும் ஒருகட்டத்தில், ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுடன் ஐக்கியமானேன். அதற்கு காரணம் என் தந்தைதான். ஏனெனில், எனக்குள் இருக்கும் திறமையை முன்கூட்டியே புரிந்துக்கொண்டு, என்னை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபடுத்தினார். அவரது நம்பிக்கையை, நியாயப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அதனால் என் தந்தையின் நம்பிக்கையை உண்மையாக்கும் பொருட்டு, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் தீவிரம் காட்டத்தொடங்கினேன். இரவு பகலாக பயிற்சி பெற்றேன்.

* உங்களுடைய முதல் போட்டி அனுபவம் பற்றி கூறுங்கள்?

6 வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு, தங்கம் வென்றிருக்கிறேன்.

* ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் என்னென்ன பிரிவுகள் இருக்கின்றன?

ஃபிரி ஸ்டைல், பிகர் மற்றும் டான்ஸ்... இந்த மூன்று பிரிவுகளில்தான், ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்படும். இதில் நான், டான்ஸ் பிரிவில் பங்கேற்கிறேன்.

* இதுவரை எத்தனை போட்டிகளில் வென்றிருப்பீர்கள்?

6 வயதில் தொடங்கி, சமீபத்தில் பங்கேற்ற நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரை நிறைய வெற்றிகளை பதிவு செய் திருக்கிறேன். தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற தங்கப்பதக்கம் உட்பட மொத்தம் 75-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் என்னிடம் உள்ளது. ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கங்கள் என்பதை தாண்டி, சில கவுரவங்களும் உண்டு. ஆசிய விளையாட்டுகளில், ஜூனியர் பிரிவில் 4-வது இடத்தையும், உலகளவிலான தரவரிசை பட்டியலில் 13-வது இடத்தையும் பிடித்து, அசத்தியிருக்கிறேன்.

* இதுவரை எதிர்கொண்டதில் மிகவும் சவாலான போட்டி எது?

ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் போட்டிகளை எதிர்கொள்வதைவிட, காயங்களை எதிர்கொள்வதுதான் மிகவும் சவாலான ஒன்று. அதுவும் காயங்களுடன், போட்டியில் பங்கேற்று பரிசு வெல்வது மிகமிக கடினமான ஒன்று. அதுபோன்ற பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு, மாநிலங்களுக்கு இடையிலான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கால் பகுதியில் மோசமான அளவில் காயம் ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகுமாறு, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும் எனக்கு நம்பிக்கை இருந்தது. தைரியமாக காயத்துடன், போட்டியில் பங்கேற்றேன். ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களுடன், அந்த போட்டியை நிறைவு செய்தேன்.

* ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில், அதிகளவில் காயம் ஏற்படுமா?

நிச்சயமாக. சக்கர காலணிகளை அணிந்து கொண்டு, காற்றுபோல லேசாக மிதந்தபடி சறுக்கிக்கொண்டே, நடனம் ஆடவேண்டும். இதுதான் டான்ஸ் ஸ்டைல் ரோலர் ஸ்கேட்டிங்கின் அம்சம். பார்ப்பதற்கு அழகான விளையாட்டு போல தோன்றும். ஆனால் போட்டியாளர்கள் பல வலிகளை தாங்கிக்கொண்டால்தான், இப்படியொரு அழகான நடனத்தை காட்சிப்படுத்த முடியும். உடலை சமநிலைப்படுத்தி, வேகமாக சறுக்குவது என்பது சவாலான ஒன்றுதான். கூடவே, இசைக்கு ஏற்ப உடல் அசைவுகளையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய முயற்சி ரசிக்கும்படியாக இருக்கும். இந்த பயிற்சி மற்றும் முயற்சிகளில் காயங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்று.

* யாரிடம் பயிற்சி பெறுகிறீர்கள்?

ஆந்திராவை சேர்ந்த பவன்குமாரிடமும், இத்தாலியை சேர்ந்த மற்றொரு பயிற்சியாளரிடமும் பயிற்சி பெறுகிறேன்.

* குடும்பத்தினரின் ஆதரவு பற்றி கூறுங்கள்?

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தாலும், ரோலர் ஸ்கேட்டிங்கில் சாதிப்பதுதான் என் ஆசை. அதற்கு அம்மா திலகவதி, அப்பா சூரிய நாராயணன் ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். அதேசமயம், விளையாட்டோடு, படிப்பிலும் கவனம் செலுத்துகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்