விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கும் திட்டம்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் பசுமை இல்லம் அமைக்கும் முயற்சி

‘ரெட்வயர் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், விண்வெளியில் பசுமை இல்லத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

Update: 2022-08-23 08:45 GMT

வாஷிங்டன்,

'ரெட்வயர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், விண்வெளியில் விண்வெளி பசுமை இல்லத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

விண்வெளியில் பயிர்களை வளர்க்கும் திறனை அதிகரிக்க இந்த திட்டம் உதவும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சியை நடத்துவதற்கான 'முழு தானியங்கு தாவர வளர்ச்சி அமைப்பு' இந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் ஒன்றாக உள்ளது.

விண்வெளி பசுமை இல்லம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்படும். நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டப் பணிகளுக்கு, இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

பூமிக்கு வெளியே பயிர் உற்பத்தி ஆராய்ச்சியை அதிகரிக்கும் குறிக்கோளுடன் விண்வெளி பசுமை இல்லத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் திறன் கொண்ட தளத்தை(விண்வெளிப் பயணத்திற்கேற்ப) ரெட்வயர் கார்ப்பரேஷன் உருவாக்கத் தொடங்கியுள்ளது. பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே உணவை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

விதையிலிருந்து முதிர்ச்சி அடையும் வரை தாவரங்களை வளர்க்கும் திறன் கொண்ட தகுதியான தாவர வளர்ச்சித் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆர்ட்டெமிஸ் திட்டமானது, புதிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு அவர்கள் நீண்ட கால நிலா காலனியை நிறுவுவார்கள். இந்த காலனி, செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் ஆய்வுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் பசுமை இல்ல திட்ட மேலாளர் டேவ் ரீட் கூறுகையில், "தாவரங்கள் உணவு, ஆக்ஸிஜன் வழங்குவதால், விண்வெளியில் முழு பயிர்களையும் வளர்ப்பது எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.

வணிக ரீதியாக வளர்ந்த திறன்கள் மூலம் விண்வெளியில் பயிர் உற்பத்தி ஆராய்ச்சியின் செயல்திறனை அதிகரித்தல், நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டப் பணிகளுக்கான முக்கியமான நுண்ணறிவுகளை வழங்க இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

'ரெட்வயர் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் விண்வெளியில் பயிர்களை வளர்க்கும் திட்டத்தின் முதல் வாடிக்கையாளராக வணிகரீதியிலான விவசாய தொழில்நுட்ப நிறுவனமான 'டீவி சயின்டிபிக்' முன்வந்துள்ளது.

மற்ற நிறுவனங்களும் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளன. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முந்தைய பல சோதனைகள் நடைபெற்று உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் ஒரே நாடு அமெரிக்கா அல்ல. கடந்த மாதம், விண்வெளி ஆராய்ச்சி துறையில் சீனா தனது நிலையை விரிவுபடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்