மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பெண்மணி புராச்சி கவுர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த புராச்சி கவுர் என்ற பெண்மணி, வீட்டை விட்டு வெளியேறி பெண்கள் கல்வி கற்க செல்வதை விமர்சிக்கும் சமூக பின்னணியில் வளர்ந்தவர். அதனால் கல்வி கற்பதை சவாலாக ஏற்றுக்கொண்டவர்.
எனினும் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை அறியாத மாணவியாக இருந்தவர். இன்றைக்கு தொழில்முறை வாழ்க்கை மீது ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு ஏணியாக மாறியிருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதோடு, கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
"என் தந்தை ரெயில்வே ஊழியர். என்னுடன் பிறந்தவர்கள் 3 சகோதரிகள். நாங்கள் நான்கு பேரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்பு படிப்பதற்கு முயற்சித்தபோது கேலி செய்தனர். 'மகள்கள் பிறந்தது உனக்கு துரதிருஷ்டம்' என்று என் தந்தையிடம் கூறினார்கள். எங்களை பற்றி தந்தையிடம் பலரும் கேவலமாக பேசுவதை பார்ப்பதற்கு அவமானமாக இருந்தது.
பள்ளியில் படிக்கும்போது நான் சராசரி மாணவியாகத்தான் இருந்தேன். எனினும் விளையாட்டுகளில் முதல் மாணவியாக இருந்தேன். அதோடு கலை, கைவினை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினேன். நன்றாகப் படித்து நல்ல வேலை கிடைத்ததும் எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் நினைத்தனர். ஆனால், என் வாழ்க்கையை நானே முடிவு செய்து கொண்டேன்.
நான் நுண்கலைப் படிப்பில் சேர விரும்பியபோது என் பெற்றோர் ஏற்கவில்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் அரசுப் பணியில் இருந்தனர். என் எதிர்காலத்தை யாரும் சிந்திக்கவில்லை. எனக்கு யாரும் வழிகாட்டவும் இல்லை. செலவுக்குப் பணம் தர மறுத்ததால் என் தந்தை மீது கூட எனக்கு வருத்தம் ஏற்பட்டது.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் படிப்பில் சேர்ந்தேன். அதன்பிறகு வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பினேன். அப்போது இது குறித்த ஆலோசனை தருவதற்கான நிறுவனங்கள் ஜெய்ப்பூரில் இல்லை. டெல்லிக்கு சென்று வெளிநாட்டு கல்விக்கு வழிகாட்டும் நிறுவனங்களின் உதவியுடன் லண்டன் சென்று படித்தேன்.
கல்விக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக பகுதிநேரமாக பணியாற்றினேன். நானே சம்பாதித்து கல்விக் கடனையும் அடைத்தேன். லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவி செய்யும் மாணவர் சங்கத்தில் பணியாற்றினேன். என் செயலை பாராட்டி பர்மிங்ஹாம் மேயர் கவுரவித்தார்.
அங்கு மகிழ்ச்சியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், என் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு என் தந்தைக்கு உடல்நலம் குன்றியதால் ராஜஸ்தான் திரும்பினேன். என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்தார். வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். ஜோத்பூரை சேர்ந்த சொந்த தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு பிறகு லண்டன் திரும்புவது சாத்தியமில்லாமல் போனது. நுண்கலை வடிவமைப்பு பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தேன். அப்போதுதான் மாணவர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களுக்கு தொழில் ஆலோசனை வழங்க எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒருவர் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மாணவர்கள் தங்கள் திறமைகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்தேன். முதல்கட்டமாக சைக்கோமெட்ரிக் சோதனை மூலம் மாணவர்களை சுய மதிப்பீடு செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கினேன். என்னுடன் இணைந்து தற்போது 10 பேர் பணியாற்றுகிறார்கள்.
மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு வழிகாட்ட நாங்கள் உதவ முயல்கிறோம். இந்தியாவில் மட்டுமின்றி, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திலும் தொழில் வழிகாட்டுதல் பட்டறைகளை நடத்தியுள்ளேன்" என்றார்.