புதுச்சேரி கடற்கரை... காந்தி சிலைக்கு அழகு சேர்க்கும் செஞ்சிக் கோட்டை தூண்கள்

புதுச்சேரி என்றதும் அழகிய கடற்கரையையும் அருகில், உள்ள காந்தி சிலையையும் சினிமாக்களிலும், குறும்படங்களிலும் அடையாளமாக காட்டுவார்கள். அப்போது இந்த காந்தி சிலையின் பின்புறம், வலது, இடது பக்கங்களில் உள்ள பிரம்மாண்ட தூண்கள் எல்லோரையும் கூர்ந்து கவனிக்க தூண்டும். இந்த கல் தூண்கள் புதுவைக்கு கொண்டு வரப்பட்டதே தனி வரலாறு.

Update: 2023-01-22 09:44 GMT

 * பிரெஞ்சு ஆளுமை

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டு வந்த காலத்தில் புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. அதாவது புதுவைக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை 1664-ல் தொடங்கினார்கள். அதைத்தொடர்ந்து படிப்படியாக தொடங்கி 1674-ல் புதுச்சேரியை முழுமையாக கைப்பற்றினார்கள்.

புதுவையை ஆண்ட பிரெஞ்சு கவர்னர்களில் டூப்ளக்ஸ் (துய்ப்ளே) என்பவர் சிறப்பு மிக்கவராக திகழ்ந்தார். இவர் 1742 முதல் 1754 வரை கவர்னராக இருந்து இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் வணிகத்தை அதிகரிக்கவும், ஆங்கிலேயரின் செல்வாக்கை ஒடுக்கவும் முயற்சி எடுத்தார். புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தையும் சீர்படுத்தினார்.

ஆற்காடு நவாப் பதவிக்கு சந்தா சாகிப்பிற்கும், முகமது அலிக்கும் போட்டி ஏற்பட்டபோது சந்தா சாகிப்பிற்கு ஆதரவு கொடுத்தார். 1745-ல் ஏற்பட்ட முதல் கர்நாடக போரில் ஆங்கிலேயர்கள் புதுவையை முற்றுகையிட்டனர். 1748-ல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி போர் முடிவுற்றது. 1750-ம் ஆண்டு 2-வது கர்நாடக போரின்போது புஸ்சி என்ற பிரெஞ்சு தளபதி செஞ்சிக் கோட்டையை கைப்பற்றினார்.

* செஞ்சிக் கோட்டை தூண்கள்

1750 முதல் 1761 வரை செஞ்சிக்கோட்டை பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் செஞ்சிக் கோட்டையில் உள்ள வேங்கடரமணி சாமி கோவிலில் இருந்து விஜயநகர நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த உயரமான கல் தூண்களை எடுத்து வந்தனர். மேலும் அங்கிருந்து பல அழகிய சிலைகளையும் எடுத்து வந்து புதுவையை அழகுபடுத்தினார்கள். இந்த கல் தூண்களில் பிரம்மா, விஷ்ணு, கிருஷ்ணர் சிற்பங்கள் * துறைமுகத்தை அழகுபடுத்தினர்

புதுவை கடற்கரையில் தற்போது காந்தி சிலை இருக்கும் இடத்தின் பின்னால் முன்பு துறைமுகம் இருந்தது. தற்போது காந்தி சிலை இருக்கும் இடத்தில் கடந்த 1866-ம் ஆண்டு செஞ்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 30 அடி உயர 8 கல் தூண்களை நட்டு அழகுபடுத்தினார்கள். இந்த இடத்தின் நடுவில் புதுவை விடுதலை பெற்ற பின் காந்தியின் சிலை நிறுவப்பட்டது.

மேலும் தற்போது நேரு சிலை இருக்கும் இடத்தில் (காந்தி சிலைக்கு எதிரே) செஞ்சி வேங்கடரமணி கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தூண்களை வைத்து அதன் மேல் கவர்னர் டூப்ளக்ஸ் சிலையை அமைத்தனர். அதன் அருகிலும் பிரமாண்டமான 4 தூண்களை நட்டனர்.

* நேரு சிலை

புதுவை விடுதலை அடைந்த நிலையில் சாமி சிலைகளின் மேல் டூப்ளக்ஸ் சிலை இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. இதை மாற்றியமைக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நேரு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் அங்கிருந்த டூப்ளக்ஸ் சிலை அகற்றப்பட்டு நேரு சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை அப்போதைய கவர்னர் குல்கர்னி 1976-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி திறந்துவைத்தார். டூப்ளக்ஸ் சிலையின் கீழிருந்த சாமி சிற்பங்களுடன் கூடிய கற் சிலைகள் புதுவை பாரதி பூங்காவில் ஆங்காங்கே அழகுக்காக நடப்பட்டன. இந்த கற்சிலைகள் இன்றும் பழமை மாறாமல் அழகுற காட்சி அளித்து வருகின்றன.

நேரு சிலை இருக்கும் இடத்தில் இருந்த டூப்ளக்ஸ் சிலை சிறுவர்கள் பூங்காவில் நடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. காந்தி சிலையின் பின்புறம் உள்ள தூண்கள் நடப்பட்டு 150 ஆண்டுகளை கடந்த நிலையில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது. அவற்றை கடந்த 2019-ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் பழுது நீக்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்