மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய கடற்கரைகள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் நகரையொட்டி அமைந்திருக்கும் கடற்கரையில் அமர்ந்து பொழுதை போக்காமல் திரும்ப மாட்டார்கள். கிர்காம் சவுபாட்டி, ஜூஹு, மத், மார்வ் போன்ற கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மும்பைக்கு அருகிலேயே மக்கள் நடமாட்டம் குறைவான, அமைதியான சூழல் கொண்ட கடற்கரைகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் நண்பர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல சிறந்த கடற்கரைகள் சிலவற்றை பார்ப்போம்.
ராஜோடி கடற்கரை:
சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமில்லாத இந்த கடற்கரை அமைதியான சூழல் கொண்டது. இரவிலும் தங்கி கடல் அலைகளின் அழகை ரசிக்கலாம். அங்கு ஏராளமான ஓய்வு விடுதி களும், கடற்கரை வீடுகளும் உள்ளன. நீர் விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு ஏற்ற கடற்கரை பிரதேசமாகவும் இது அமைந்திருக்கிறது. அருகில் உள்ள ரெசார்ட்டுகளில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. கடற்கரை பகுதியில் கூட்டமாக உலவும் பறவைகளை படம் பிடித்தும் ரசிக்கலாம். விரார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைக்கு பேருந்து, ரெயில் மூலம் பயணிக்கலாம்.
கெல்வா கடற்கரை:
கடற்கரையையொட்டி சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு வளர்ந்திருக்கும் மரங்கள் வனத்துக்குள் இருக்கும் ஒரு கடற்கரைக்குள் நுழைந்தது போன்ற உணர்வை தரும்.
வார இறுதி நாட்களில் கூட சுதந்திரமாக கடற்கரையில் உலவி மகிழலாம். மக்கள் கூட்டம் அதிகம் காணப்படாதது, கடற்கரை சூழலை இனிமையாக்கி விடும். கெல்வா ரோடு ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். பேருந்து மூலமும் பயணிக்கலாம்.
தஹானு கடற்கரை:
17 கி.மீ.க்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த கடற்கரை பால்கர் தாலுகாவில் அமைந்துள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழல் கொண்ட இந்த கடற்கரை குடும்பத்தினர் சுற்றுலா செல்ல ஏற்றது. இந்த கடற்கரை நகரத்தின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியுள்ளது. ஊறுகாய், பப்பாளி, பாரம்பரிய மசாலா, தேன் போன்ற சிறு தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. ஆக்ரோஷமில்லாத அலைகளின் தாலாட்டில் அமைதியாக காட்சி அளிக்கும் இந்த கடற் கரைக்கு வாகனத்தில் செல்வது சவுகரியமாக இருக்கும். டாக்சி, ஆட்டோ, பேருந்து மூலமும் சென்றடையலாம்.
ஊரன் கடற்கரை
நவி மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை பைர்வாரி கடற்கரை என்றும் அழைக்கப்படும். இந்த பகுதியில் மீனவ கிராமங்கள் அமைந்திருந்தாலும் நெல் உற்பத்தி அதிக அளவில் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் தீபகற்ப கடற்கரையாகவும் விளங்குகிறது.
கடற்கரை பிரபலமானதாக இருந்தாலும் சுற்றுப்பகுதிகளில் பல கோவில்களும் உள்ளன. இந்தக் கடற்கரையில் நின்று பார்த்தால், மும்பை மாநகரம் அழகுற தெரியும்.
கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து படகு மூலம் ஊரன் கடற்கரையை அடையலாம். கர்ஜத் அல்லது பன்வெல் வரை ரெயிலில் பயணித்து அங்கிருந்து பேருந்திலும் சென்றடையலாம்.
முருத் கடற்கரை:
இந்த கடற்கரையின் நடுவில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள முருத்-ஜன்ஜிரா கோட்டை புகழ்பெற்றது. கடலில் அலை குறைவாக இருக்கும்போது படகு மூலம் இங்கு சென்றடையலாம்.15-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பேரரசர் மாலிக் ஆம்பரால் இது கட்டப்பட்டது. பாராகிளைடிங் உட்பட சில நீர் விளையாட்டுகளும் இந்த கடற்கரையில் பொழுதை போக்க துணைபுரியும். இந்த கடற்கரைக்கும் கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து படகில் செல்லலாம். மண்ட்வா ஜெட்டி வழியாகவும் பயணிக்கலாம்.