பட்டி மிதிக்கும் பரவச பொங்கல்
பொங்கல் திருநாளை, உழவர்களின் உவகை திருவிழா என்று சொன்னால் அது மிகையல்ல. பொங்கல் அன்று உற்சாகமான பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தாலும், பசுமாடுகளை அழைத்து வந்து நடத்தப்படும் ‘பட்டி மிதித்தல்’ என்கிற ஐதீக நிகழ்வு, பண்பாட்டு வாயிலாகவும், ஆன்மிக ரீதியாகவும் நம்மை ஒன்றிணைக்கிறது.
மாட்டுப்பொங்கல் அன்று, மாடுகளை அலங்கரித்து வழிபடுவோம். அன்றைய தினம் மாடுகள் தான் விழா நாயகன். அதுபோல பொங்கல் அன்று நடத்தப்படும், 'பட்டி மிதித்தல்' நிகழ்விலும் மாடுகள் தான் கதாநாயகன். அதுவும் பசு மாடுகள்தான் முதலில் இந்த பட்டிப்பொங்கலுக்கு புதுப்பெண்போல் அலங்கரித்து அழைத்து வரப்படுகின்றன. அதனை அடுத்து கழனி வேலையில் ஈடுபடுத்தப்படும் காளை மாடுகளும் வரிசையாக வரவழைக்கப்படும். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அழைத்து வரப்படும் புதுப்பெண் புகுந்த இடத்தில் தனது வலது காலை எடுத்து வைப்பதுபோல், இந்த நிகழ்விலும் பசுமாடுகள் பட்டியில் கால்களை பதிப்பது பார்க்க பரவசமூட்டுவதாக இருக்கும்.
இந்த பட்டி மிதித்தல் நிகழ்ச்சி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகையன்று நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி கூறும்போது, "கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உழவியல் துறை சார்பில் கடந்த 1971-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையின்போது 'பட்டிப்பொங்கல்' கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி. பொங்கல் நாளில் பட்டி மிதித்தல் நிகழ்வு என்பது தமிழகத்தின் முக்கிய நிகழ்வாகும். கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்வில், பசு எதை முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறதோ, அதுவே அந்த ஆண்டின் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தரையில் 3 அடிக்கு பெரிய கட்டம் வரைந்து, அதை மும்மூன்று பிரிவுகள் என 9 கட்டங்களாக பிரித்து தொட்டி போன்று அமைக்கப்படும். தொட்டிக்குள் தண்ணீர் ஊற்றி ஒவ்வொரு தொட்டியிலும் இளநீர், தயிர், பால், பொங்கல் கஞ்சி, மஞ்சள், குங்குமம், பன்னீர், மாட்டு கோமியம், நவதானியங்கள் என்று ஒவ்வொரு பொருள் வைக்கப்படும். இந்த தொட்டியைத்தான் 'பட்டி' என்கிறோம். இந்த பட்டிக்கு மேல் பந்தல் அமைத்து அதைச்சுற்றிலும் ஊணாங்கொடி, முடக்கத்தான், ஆவாரம்பூ மற்றும் தாழம்பூ செடி மடல், மஞ்சள் கொத்து போன்றவற்றை கட்டி அலங்காரம் செய்து வைப்போம். அந்த பட்டியில் மிதிப்பதற்காக பசு மாடு மற்றும் காளை மாடுகளின் கழுத்தில் மாலை அணிவித்து கயிறு கட்டி 2 பேர் இழுத்து வருவார்கள். முதலில் கொண்டுவரப்படும் பசு மாடு, எந்த பட்டியில் முதலில் கால் மிதித்து செல்கிறதோ அந்த பட்டியில் வைக்கப்பட்டுள்ள பொருள் அந்த ஆண்டில் பெரும் வளர்ச்சியை அடையும் என்பது நம்பிக்கை" என்றார்.