அபூர்வ ஆக்டோபஸ்
நம்மை வியக்க வைக்கும் கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று, ஆக்டோபஸ். பொதுவாக அனைவரும் அறிந்த ஆக்டோபஸ் என்பது, எட்டு நீண்ட கால்களுடன் கூடிய ஆக்டோபஸ்தான்.
ஆனால் ஆக்டோபஸ் உயிரினத்தில் நிறைய வகை உண்டு. ஒவ்வொன்றும் உருவத்தில் மாறுதல்களுடன் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் 'டம்போ ஆக்டோபஸ்கள்.' 1941-ம் ஆண்டு வெளியான `டம்போ' என்ற ஆங்கில அனிமேஷன் திரைப்படத்தில் காணப்படும் முதன்மை கதாபாத்திரத்தை ஒத்து இருப்பதால் இந்த ஆக்டோபஸ்க்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. இந்த வகை ஆக்டோபஸ், தலையில் பெரிய அளவிலான காது போன்ற துடுப்புகளைப் பெற்றுள்ளது. இது டம்போ ஆக்டோபஸ் கண் பகுதிக்கு மேலே அமைந்திருக்கிறது. இந்த டம்போ ஆக்டோபஸ் வகையிலும் கூட 17 இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் முதல் 7 ஆயிரம் மீட்டர் வரையான குளிர்ந்த, ஆழமான பகுதிகளில் இவை வாழ்கின்றன. இதுவரை அறியப்பட்ட ஆக்டோபஸ்களில், டம்போ ஆக்டோபஸ்கள்தான், அதிக ஆழத்தில் வாழ்வதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இவற்றின் சராசரி ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே.